அம்பத்தூர் அருகே போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால்!-கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

        -MMH


அம்பத்தூர் அருகே போனில் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.



    சென்னை அம்பத்தூர், வரதராஜபுரம் பழைய எம்.டி.எச் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஸ்ரீதர். இவரது மகள் பத்மாவதி. இவர், அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். தேர்வு நெருங்கும் நேரத்தில் பத்மாவதி படிக்காமல் நீண்ட நேரமாக போனில் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த பெற்றோர் அவரை கண்டித்ததாக தெரிகிறது.


      இதனால் மனமுடைந்த பத்மாவதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே பத்மாவதி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


      தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. உளவியல் ரீதியான பிரச்சனைகள் இன்றைய தலைமுறையினருக்கு அதிகம். நவீன உலகில் பறக்கும் நாம், கைபேசிகளையும், கணிணிகளையும் மட்டுமே உற்ற நண்பர்களாகப் பார்க்கிறோம். தன் குழந்தைகளுக்கு இல்லை என்ற சொல்லே இருக்கக் கூடாது என்று பார்த்து, பார்த்து வளர்க்கும் பெற்றோர், அவர்களுக்கு எதிர்காலத்தில் சமூகத்தில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கான மனப்பக்குவத்தை பழக்க மறந்து விடுகிறார்கள்.


        தற்கொலையை தடுப்பதற்கு நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு. வாழ்க்கை இருட்டாகத் தெரிகிறதா? அச்சம் வேண்டாம், நீங்கள் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டிருக்கிறீர்கள். தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


- R.ராஜேஷ், சென்னை மேற்கு.


Comments