மின்வாரியத்திற்கே ஷாக் கொடுத்த வாலிபர்.!-கரண்டை காணோம் காவல் துறையிடம் புகார்!!

     -MMH


      திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த லோகநாதன் என்பவர் அவர் கட்டும் வீட்டிற்கு மின் இணைப்பு இலஞ்சமில்லாமல் பெற கடந்த ஜூன் மாதம் ஆன்லைனில் விண்ணப்பித்திருக்கிறார். உடனே மின்வாரிய அதிகாரிகள் ஆய்வுக்கு வந்துவிட்டு அவரிடம் மின் இணைப்பு கொடுக்கவும், கம்பம் நடவும் ரூ.50,000 வரை செலவாகும் என பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது.


       அந்த நபரோ  நான் எதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி டெபாசிட் தொகையை சுமார் ரூ.7000 த்தை செலுத்திவிட்டு சட்டப்படி எனக்கு எப்போ லைன் கொடுக்கனுமோ கொடுங்க என சொல்லிவிட்டு இணைப்புக்காக காத்திருந்திருக்கிறார். மின்வாரிய சட்டப்படி அவருக்கு 60 நாளில் இணைப்பு கொடுக்க வேண்டும். ஆனால் அவருக்கு லைன் கொடுக்காமல் விட்டதுடன் கடந்த செப்டம்பர் ஏழாம் தேதி அவரது மொபைலுக்கு லைன் கொடுத்து மீட்டர் மாட்டியதாகவும், பைல் குளோஸ் செய்யப்படுவதாகவும் ஒரு குறுந்தகவல் வந்திருக்கிறது.


    அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் தன்னுடைய நண்பரிடம் இதுகுறித்து ஆலோசனை கேட்டிருக்கிறார். அதில் உள்ள இணைப்பு எண்ணை வைத்து ஆன்லைனில் பணம் செலுத்தி இரசீது எடுத்துட்டு புகார் கொடுக்க சொல்லியிருக்கார். அவரும் அதேபோல் கொடுக்காத இணைப்புக்கு பணம் கட்டி இரசீது எடுத்து வைத்துக்கொண்டு அதை ஆதாரமாக வைத்து 'ஆன்லைனில் என் வீட்டில் கரண்ட் மற்றும் மீட்டரை காணோம் கண்டுபிடித்து தரக்கோரி' காவல்துறையிடம் புகார் செய்திருக்கிறார்.


     அடுத்தநாளே மின்வாரியத்தில் இருந்து அந்த நபருக்கு  பல போன்கள் வந்திருக்கின்றன. இவர் செய்ய வேண்டிய வேலை அனைத்தையும் மின்வாரியமே செய்துவிட்டு கம்பமும் நட்டு அவர்களே வயர் இழுத்துக்கட்டி மீட்டரையும் மாட்டிவிட்டார்களாம் ஒரே நாளில். அதை செய்துவிட்டு புகாரை வாபஸ் வாங்க சொன்னதால் அவருக்கு பைசா இலஞ்சமில்லாமல் லைன் கிடைத்துவிட்டதால் அவரும் புகாரை வாபஸ் பெற்றதாக தெரிகிறது.


      இப்படிப்பட்ட சூழ்நிலைதான் திருப்பூர் மாவட்டம் முழுதும் நிலவுகிறது. பணமில்லாமல் மின்வாரியத்தில் எந்த வேலையும் நடப்பதில்லை என்று கூறும் சமூக ஆர்வலர்கள்,கடந்த சில தினங்களுக்கு முன் திருப்பூர் மாவட்ட மின்வாரிய முதன்மை பொறியாளர் கொடுத்த ஒரு அறிக்கை, செய்தித்தாளில் பார்த்தோம்,அதில்-பிரவுசிங் செண்டர்களில் சென்று ஆன்லைனில் விண்ணப்பித்து பணத்தை இழக்காதீர்கள். நேரடியாக மின்வாரியதில் வந்து இணைப்பு பெறுங்கள் என்று கூறியிருப்பது கேலிக்கூத்தான விசயம். பாதிப்புக்கு உள்ளானவரின் விசயம் இவருக்கு தெரியாமலா இருந்திருக்கும். எல்லாம் அந்த கடவுளுக்கே வெளிச்சம் என்று கூறினார்.


-சோலை, சேலம்.


Comments