மந்த நிலையில் இந்திய பொருளாதாரம்,.!-ஏற்றுமதி, இறக்குமதியும் மளமள சரிவு.!

       -MMH
மந்த நிலையில் இந்திய பொருளாதாரம், 12.66% குறைந்த ஏற்றுமதி, இறக்குமதியும் மளமள சரிவு.


    இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதம் 12.66 சதவீதம் குறைந்துள்ளதாக அரசு வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கொரோனா நோய் தொற்று மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக, நாட்டின் ஜிடிபி நெகட்டிவ் நிலைக்கு செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இதை வெளிப்படையாகவே செய்தியாளர் பேட்டியிலும் தெரிவித்தார்.



    இந்த தாக்கம் இப்போதே தெரிய ஆரம்பித்துள்ளது. ஏற்றுமதி தொடர்ந்து சரிந்து வருகிறது. பெட்ரோலியம், தோல், பொறியியல் பொருட்கள் மற்றும் கற்கள் மற்றும் நகைப் பொருட்களின் ஏற்றுமதி குறைந்து வருவதால், ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 12.66 சதவீதம் சரிந்து 22.7 பில்லியன் டாலராக இருந்தது என்று அரசு நேற்று வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



     அதே நேரம், நாட்டின் இறக்குமதியும் ஆகஸ்ட் மாதத்தில் 26 சதவீதம் குறைந்து 29.47 பில்லியன் டாலராக இருந்தது. இதன் அர்த்தம் என்னவென்றால், உள் நாட்டிலும் நுகர்வு குறைந்துள்ளது என்பதுதான். மக்கள் கையில் பணப் புழக்கம் குறைவாக இருப்பதுதான் இதுபோன்ற நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.


   இறக்குமதி குறைந்துள்ளதால் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் வர்த்தக பற்றாக்குறையை 6.77 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 13.86 பில்லியன் டாலர் என்ற அளவுக்கு இருந்தது.


   எண்ணெய் இறக்குமதி 41.62 சதவீதம் குறைந்து 6.42 பில்லியன் டாலராக உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்டில் தங்க இறக்குமதி 3.7 பில்லியன் டாலராக உயர்ந்தது, இது 2019 ஆகஸ்டில் 1.36 பில்லியன் டாலராக இருந்தது. ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில், ஏற்றுமதி 26.65 சதவீதம் குறைந்து, 97.66 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 43.73 சதவீதம் குறைந்து 118.38 பில்லியன் டாலராகவும் உள்ளது. இந்த காலகட்டத்தில் வர்த்தக பற்றாக்குறை 20.72 பில்லியன் டாலராக இருந்தது.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


-B.செந்தில் முருகன், சென்னை தெற்கு.


Comments