சசிகலா விடுதலை ஆகும் நாள்!!- ஆர்.டி.ஐ.தகவல்..!

    -MMH


     வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது நெருங்கிய தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாயும், மற்ற அனைவருக்கும் 10 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.


  ஜெயலலிதா மறைந்த நிலையில் மற்ற மூவரும் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவின் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது.



       ஆனால் அதற்கு முன்னதாகவே விடுதலை ஆகிவிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதுதொடர்பான சட்ட ரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் சசிகலா விடுதலை குறித்து ஊடகங்களில் பல்வேறுவிதமான தகவல்களும் வெளியாகி வந்தன.



   இந்நிலையில் பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி ஆர்.டி.ஐ மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அதிகாரப்பூர்வ பதில் கிடைத்துள்ளது. அதாவது, அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆகிறார்.


 அதேசமயம் சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை. ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும். இந்த அபராதத் தொகையை கட்டத் தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப் போகும் என்று கூறப்பட்டுள்ளது.


   இதன்மூலம் சசிகலா விடுதலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவரது வருகையால் அதிமுகவில் அதிரடியான மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 ஏனெனில் சசிகலாவின் ஆதரவாளர்கள் பலரும் அதிமுகவிற்குள் இன்னும் இருப்பது தெரிகிறது. அதேசமயம் அதிமுக, அமமுக இணையக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கான திரை மறைவு வேலைகளில் பாஜக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.


-ஸ்டார் வெங்கட்,கோவை.


Comments