மூடப்படும் அபாயநிலையில் 1.75 கோடி கடைகள்!!

      -MMH


            நாடு முழுவதிலும் உள்ள 25% சிறு கடைகள், அதாவது சுமார் 1.75 கோடி சிறு கடைகள், தொழில்கள் மூடப்படும் அபாய நிலையில் இருப்பதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


            கடந்த எட்டு மாதங்களாக கொரோனா வைரஸ் உலகையே சுகாதார ரீதியாகவும், பொருளாதாரம் மற்றும் தொழில் ரீதியாகவும் சீரழித்திருக்கிறது. இந்தியாவில் சிறு வணிகர்கள், கடைகள், சுய தொழில் செய்வோர், நடைபாதை வியாபாரிகள் என பல சாராரை பொருளாதார ரீதியாக கொரோனா கடுமையாக தாக்கியிருக்கிறது.


           இதுதொடர்பாக அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனாவால் நூற்றாண்டு காணாத வகையில் உள்நாட்டு வர்த்தகம் மோசமான நாட்களை சந்தித்து வருகிறது. கொரோனாவால் வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைப்பதற்கான அறிகுறிகளும் இல்லை.


           இந்திய உள்நாட்டு வர்த்தகத்தில் 7 கோடிக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் இருக்கின்றனர். இவர்களால் 40 கோடிக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. வர்த்தகர்களுக்கு போதிய கடனுதவி வழங்க வங்கித் துறை தவறிவிட்டது. வெறும் 7% வர்த்தகர்களுக்கு மட்டுமே கடன் கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.


மீதமுள்ள 93% வர்த்தகர்கள் கந்துவட்டி கடன் போன்றவற்றை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 25% தொழில்கள் மூடப்படும் அபாயநிலை உருவாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வர்த்தகர்களின் நிலை அறிந்து பிரதமர் மோடி குறுக்கிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


-ஸ்டார் வெங்கட்.


Comments