குட்கா விவகாரம்!! 2-வது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்திவைக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!!

     -MMH


     குட்கா விவகாரம்: 2-வது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை நிறுத்திவைக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!


     பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரத்தில் 2-வது முறையாக அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


     2017-ம் ஆண்டு பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீசை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்தனர்.


     இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, இதுகுறித்து பேரவைச் செயலாளரும், உரிமைக்குழுவும் பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீசுக்கு இடைக்கால தடையும் விதித்தார். இந்த உத்தரவை எதிர்த்து பேரவைச் செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


     இந்த மேல்முறையீட்டு வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.பேரவைச் செயலாளர் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனும், பேரவை உரிமைக்குழு தரப்பில் அரசு சிறப்பு மூத்த வழக்கறிஞர் சோமையாஜியும் ஆஜராகி வாதிட்டனர்.


     உரிமை பிரச்சினை என்பது முழுக்க முழுக்க சட்டமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும், உரிமைக்குழு நோட்டீஸுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் வாதிட்டனர்.


     வழக்கை விசாரித்த நீதிபதிகள் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ.க்களிடம் உரிமைக் குழு விசாரணை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்டனர். அதேநேரத்தில், இந்த மேல்முறையீடு மனுக்கள் மீது, 18 பேரும் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


-மைதீன்.


Comments