கொரோனா வைரசால் 28 நாட்கள் தாக்குப்பிடிக்க முடியும்!! -ஆய்வில் தகவல்!!

     -MMH


     புதுடெல்லி: 'கொரோனா வைரஸானது ரூபாய் நோட்டுகள், கண்ணாடிகள், செல்போன் திரை, இரும்புப் பொருட்கள் போன்றவற்றில் 28 நாட்கள் வரையிலும் தாக்குபிடிக்கும்' என்று புதிய ஆராய்ச்சி ஒன்றில் தெரிய வந்துள்ளது.


     சமீப நாட்களாக இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, இரண்டாம் அலையாகத் தாக்கத் தொடங்கியிருக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. இதுவரை எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மார் தட்டியவர்கள்கூட இந்த முறை இன்னும் கூடுதல் கவனமுடன் இருப்பதே நல்லது என்ற எச்சரிக்கை தருகிறார்கள் நிபுணர்கள்.


     இந்நிலையில், கொரோனா வைரஸின் வீரியம் எத்தனை நாட்கள் என்பதைக் கண்டறிந்துள்ளது புதிய ஆராய்ச்சி. ஆஸ்திரேலியா நேஷனல் சயின்ஸ் ஏஜென்சி மேற்கொண்டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரை, வைராலஜி ஜர்னல் இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது
ஆய்வில் கூறியிருப்பதாவது:


     'கொரோனா பரவலைத் தடுக்க அதன் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வது முக்கியம். இன்ப்ளூயன்சா வைரஸானது 17 நாட்கள் வரையிலும் வீரியத்துடன் இருக்கும். அதேபோல் கொரோனா வைரஸ் எத்தனை நாட்கள் உயிர் வாழும் என்பதைக் கண்டறிவது அவசியம் என்பதால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சராசரி அறை வெப்பநிலை என்று குறிப்பிடப்படும் 20 டிகிரி செல்சியஸில் கொரோனா வைரஸ் நல்ல செயல்திறனுடன் இருக்கிறது. 30 முதல் 40 டிகிரி செல்சியஸில் கொரோனா வைரஸின் வீரியம் குறைகிறது.


     இந்த வெப்பநிலையில் அந்த வைரஸால் அதிகம் தாக்குப் பிடிக்க முடிவதில்லை. அதேபோல் வழுவழுப்பான தளங்களில் நீண்ட நேரம் கொரோனா வைரஸ் உயிர் வாழ்கிறது. கண்ணாடிகள், ஸ்மார்ட் போன்களின் திரை, ரூபாய் நோட்டுகள், பிளாஸ்டிக் போன்ற வழுவழுப்பான தளங்களில் 28 நாட்கள் வரையிலும் இருக்கும். எச்சில், சளி போன்றவற்றின் மூலம் கொரோனா பரவுகிறது என்பது நமக்குத் தெரியும். அதேபோல் உடலின் புரதம், கொழுப்பு போன்றவற்றிலும் கொரோனா வைரஸ் வாழும் நேரம் அதிகரிக்கிறது. ஆனால், இதுகுறித்து இன்னும் அதிக ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.' இவ்வாறு அந்த ஆய்வுக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.


-மைதீன்.


Comments