ரூ. 3.6 கோடி கடத்தல்!! - கோவையில் 6 பேர் கைது!!

     -MMH


         சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட, 3.6 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள், ஆறு பேரை கைது செய்தனர்.'வந்தே பாரத்' திட்டத்தில், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள், விமானத்தில் அழைத்து வரப்படுகின்றனர். சார்ஜாவில் இருந்து கோவைக்கு, 'ஏர் அரேபியா' விமானம் கடந்த, 24ம் தேதி கோவை வந்தது.


        அதில் பயணம் செய்த, ஆறு பேரின் நடவடிக்கையில், வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, வருவாய் புலனாய்வு இயக்குனரக துணை இயக்குனர் சதிஷ் தலைமையிலான அதிகாரிகள், உடைமைகளை பரிசோதித்தனர்.இதில், தங்கத்தை பசை வடிவில் மாற்றி, அவற்றை துணிகள், உள்ளாடைகளில் மறைத்து வைத்திருப்பது தெரிந்தது.


         அவர்களிடம் இருந்து, 3.6 கோடி ரூபாய் மதிப்பிலான, 6.88 கிலோ தங்கத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கமிஷன் தொகைக்காக, தங்கத்தை கடத்தி வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். தங்கத்தை கடத்தி வந்த சஜீப், பாஷா, நாசர், சாகுல் ஹமீது, யுவராஜ், தர்மராஜ் ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தி, ஜாமினில் விடுவித்தனர்.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments