அடுத்த அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார்!! - நாளை முடிவு!!

     -MMH


     ஈபிஎஸ்-க்கு 18 அமைச்சர்கள் ஆதரவு.. நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு ! - ஓபிஎஸ் முடிவு என்ன?
     அதிமுகவில் தற்போது பூகம்பமாக வெடித்துள்ளது அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தான். முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.


     சென்னையில் கடந்த 28ஆம் தேதி நடந்த அதிமுக செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டத்தில் முடிவு எடுக்கப்படாமல் வரும் 7ஆம் தேதி(நாளை) அறிவிக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.     அதன்பிறகு கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை, அவரவர் ஆதரவாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து சொந்த மாவட்டமான தேனிக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம், அங்கு தமது பண்ணை வீட்டில் நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்.


     இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், சி.வி.சண்முகம் உள்ளிட்டோருடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, 18 அமைச்சர்கள் தங்களது நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமியிடம் கூறியுள்ளனர். அதாவது அவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்போம் என உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. அதோடு, 28 எம்எல்ஏக்கள், 17 மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு உள்ளதாகவும் அமைச்சர்கள் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.     மேலும் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கும் திட்டம் இல்லையாம். மாறாக தேர்தல் பிரசார குழு, தொகுதி பங்கீட்டு குழு, விளம்பர குழு என தேர்தல் நேரத்தில் அமைக்கப்படும் குழுக்களை அமைக்கவே திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் முதலமைச்சரை, தலைமைச்செயலகத்தில் சந்தித்து ஆலோசித்தனர்.
 


     மேலும் திட்டமிட்டப்படி நாளை முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு  கட்சியின் முழு அதிகாரம் கொண்ட ஒரு பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது. எதுவாயினும் நாளையை தினத்தை அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.


-மைதீன்.


Comments