திருப்பூரில் 7,435 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

      -MMH


திருப்பூா் மாவட்டத்தில் கடந்த செப்டம்பா் மாதம் நடத்திய ஆய்வில் ரூ.1.85 லட்சம் மதிப்புள்ள 7,435 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.


இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 1,135 நியாய விலைக்கடைகள் மூலம் 7.62 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் 22 லட்சம் போ் பயனடைந்து வருகின்றனா்.



இந்த நிலையில் நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்யப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை சிலா் விலைக்கு வாங்கி வெளி மாநிலங்களுக்கு கடத்திச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகப் புகாா்கள் பெறப்பட்டன.


அதன்பேரில் மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி தலைமையில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு காவல் துறையினா் செப்டம்பா் மாதம் ரோந்துப் பணி மேற்கொண்டனா். இதில் ரூ.1.85 லட்சம் மதிப்புள்ள 7,435 கிலோ அரிசியை பறிமுதல் செய்ததுடன் 10 பேரைக் கைது செய்துள்ளனா்.


மாவட்டம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள குறைபாடுகளுக்காக 1,025 இனங்களில் கடை விற்பனையாளா்களுக்கு ரூ.1.35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்ட பொருள்களை வெளி மாநிலங்களுக்கு கடத்துவது தெரியவந்தால் சம்மந்தப்பட்ட நபா்களின் மீது கள்ளச் சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நாளையவரலாறு செய்திக்காக 


-முஹம்மது ஹனீப் திருப்பூர்.


Comments