ஊழல் அதிகாரிகளால் அதிருப்தி! - மதுரை உயர்நீதிமன்றம்..!

    -MMH


சிறந்த நிர்வாகம் தந்த தமிழகம் - ஊழல் அதிகாரிகளால் அதிருப்தி!!!


மதுரை : 'ஒரு காலத்தில் நிர்வாகத்தில் தமிழகம் சிறந்து விளங்கியதாக கருதப்பட்டது. ஊழல் அதிகாரிகளால் அப்பெயர் மறைந்து விட்டது' என அதிருப்தியை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பதிவு செய்துள்ளது.


மதுரையில் ஒருவருக்குச் சொந்தமான நிலம் ஏற்கனவே சர்வே செய்யப்பட்டதாகவும், அதை மீண்டும் சர்வே செய்ய வி.ஏ.ஓ., கட்டாயப்படுத்துவதாகவும், அதற்கு தடைகோரியும் வழக்கு தாக்கலானது.


நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவு: சொத்துக்களை சர்வே செய்வதில் கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பின்பற்ற வேண்டும். சர்வே அல்லது மறு சர்வே தொடர்பான மனுக்கள் கிடைக்கப் பெற்ற, 30 நாட்களில் சர்வே செய்ய வேண்டும். தவறினால் விண்ணப்பத்தை கட்டணத்துடன் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் சம்பளத்தில், 2, 500 பிடித்தம் செய்ய வேண்டும். கடமை தவறும் மற்றும் தவறு செய்யும் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை, சஸ்பெண்ட், பணி நீக்கம் செய்ய வேண்டும்.


பதவி உயர்வை தவிர்க்கும் வகையில், தவறான நடவடிக்கைகள் குறித்து பணிப் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். யார், யாருக்குச் சொந்தமான இடம் சர்வே செய்யப்பட்டது, அவை எங்கு அமைந்துள்ளன, சர்வே செய்த தேதி, சர்வே செய்த அலுவலர் பெயர் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய பதிவேட்டை பராமரிக்க வேண்டும். அதை உயரதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். சர்வே விபரங்களை தகவல் உரிமைச் சட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அல்லது வேறு யாரும் கோரினால் வழங்க வேண்டும்.


வருவாய்த்துறையில் அலுவலர்கள் மற்றும் குறிப்பாக சர்வேயர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க, லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நிறைவேற்ற தமிழக அரசு ஒரு மாதத்தில் சுற்றறிக்கை வெளியிட வேண்டும்.


அரசிடம் சம்பளம் பெறுவதை மறந்துவிட்டு, அதிகாரிகள் தங்கள் பணியைச் செய்யவே லஞ்சம் கேட்கின்றனர். சில சர்வேயர்கள் வருவாய்த்துறை பணியில் சேர்ந்து அரசின் வருவாயை பெருக்குவதிற்கு பதில், தங்கள் வருவாயை பெருக்குவது பற்றி சிந்திக்கின்றனர். ஒரு காலத்தில் நிர்வாகத்தில் தமிழகம் சிறந்து விளங்கியதாக கருதப்பட்டது. ஊழல் அதிகாரிகளால் அப்பெயர் மறைந்துவிட்டது.இவ்வாறு நீதிபதி வேதனையுடன் தெரிவித்தார்.


நாளையவரலாறு செய்திக்காக 


HM,முஹம்மது ஹனீப்திருப்பூர்.


Comments