கபில் தேவுக்கு மாரடைப்பு!! - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

     -MMH


        புதுடில்லி: இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. டில்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.


         உலக கிரிக்கெட்டில் அப்போதைய பலம் வாய்ந்த விண்டீஸ் அணியை சாய்த்து, 1983ல் இந்திய அணிக்கு முதல் உலக கோப்பை வென்று தந்தவர் முன்னாள் கேப்டன், 'ஆல் ரவுண்டர்' கபில் தேவ் 62. இதன் பின் இந்தியாவில் கிரிக்கெட் வேகமாக வளரத் துவங்கியது. மொத்தம் 131 டெஸ்ட், 225 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றார். 1994ல் ஓய்வு பெற்ற இவர், அவ்வப்போது கோல்ப் விளையாடினார். நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.


         உடனடியாக டில்லியில் உள்ள 'போர்டிஸ் எஸ்கார்ட்ஸ்' இருதய மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். இங்கு இருதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பை சரி செய்ய 'ஆன்ஜியோபிளாஸ்டி' சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். தற்போது நலமாக இருக்கிறார்.


         மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,'நெஞ்சு வலி காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணிக்கு கபில்தேவ் இங்கு கொண்டு வரப்பட்டார். இங்கு உடனடியாக 'ஆன்ஜியோபிளாஸ்டி' சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள இவர், அடுத்த ஓரிரு நாட்களில் 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார்,' என தெரிவித்துள்ளது.


  கபில்தேவ் மனைவி ரோமி கூறுகையில்,''முதல் நாள் வழக்கத்துக்கு மாறாக காணப்பட்டார். தற்போது சோதனைகள் நடந்து வருகின்றன. நலமாக உள்ளார்,'' என்றார்.


      கபில் தேவ் நண்பர், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் அசோக் மல்ஹோத்ரா கூறுகையில்,''கபில் தேவ் தற்போது நலமாக உள்ளார், இதுகுறித்து அவரது மனைவியிடம் பேசினேன்,'' என்றார்.


கும்ளே வேண்டுதல்:


   கபில் தேவ் விரைவில் குணமடைய பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய அணி முன்னாள் கேப்டன், 'சுழல் ஜாம்பவான்' கும்ளே வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில்,'பாஜி... விரைவில் குணமடைய வேண்டும்,' என தெரிவித்துள்ளார்.


   இர்பான் பதான் கூறுகையில்,''எனது பிரார்த்தனைகள் எப்போதும் உங்களுக்காகவே இருக்கும். மீண்டு வாருங்கள் கபில்தேவ்,' என தெரிவித்தார்.


          இதேபோல இந்திய ஜாம்பவான் சச்சின், கேப்டன் விராத் கோஹ்லி, பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல் உள்ளிட்டோரும் கபில்தேவ் விரைவில் மீண்டு வர வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


நன்றி:


         கபில் தேவ் தனது 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில்,'என்மீது அன்பும், அக்கறையும் கொண்ட அனைவருக்கும் நன்றி. உங்கள் வாழ்த்துக்களால் மீண்டு வருகிறேன்,' என தெரிவித்துள்ளார்.


நாளைய வரலாறு செய்திக்காக, 


-முஹம்மது ஹனீப்,திருப்பூர்.


Comments