ஓட்டல் கழிவுகள் மூலம் எரிபொருள் தயாரித்து வாகனங்களுக்கு பயன்படுத்தலாம்!! - சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தல்!!

     -MMH


     கோவை: மின்சார வாகன பயன்பாட்டை அரசுகள் ஊக்குவித்து வரும் நிலையில், 'ஓட்டல் கழிவுகள் மூலம் எரிபொருள் தயாரித்து அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு பயன்படுத்த முயற்சிக்கலாம்' என்ற யோசனையை, சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


     சுற்றுச்சூழல் மாசு கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகன பயன்பாட்டை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. இதன் எதிரொலியாக மின் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது; சி.என்.ஜி., மூலம் இயங்கும் வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.இதன் அடுத்தகட்டமாக பயோ-சி.என்.ஜி., (பயோ கம்ப்ரெஸ்டு நேச்சுரல் காஸ்) போன்ற புதிய வகை எரிபொருட்கள் மூலம் வாகனங்களை இயக்க முயற்சிக்க துவங்கியுள்ளனர்.


     இதேபோன்று நாமும், இயற்கைக்கு ஏற்ற, மாற்று எரிபொருள்களுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என, சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இது குறித்து சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:"தற்போது சி.என்.ஜி. மூலம் இயங்க கூடிய வாகனங்கள் பிரபலம் அடைந்து வருகின்றன. இத்தகைய வாகனங்கள், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சி.என்.ஜி., என்பதை தாண்டி, பயோ-சி.என்.ஜி., என்ற முறையில் விரைவில் பஸ் இயக்க உள்ளனர். இதற்காக பல்வேறு ஓட்டல்களில் இருந்து சேகரிக்கப்பட்ட உணவு கழிவுகளில் இருந்து இந்த பயோ-சி.என்.ஜி., எரிபொருள் தயாரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


     இதுபோன்ற நடவடிக்கைகளை அனைத்து தரப்பிலும் முன்னெடுத்து சென்றால், சுற்றுச்சூழல் மாசு கட்டுப்படுத்த முடியும். இதேபோன்று நம் பகுதிகளிலும் மாற்றுச்சிந்தனைகளுடன் செயல்பட வேண்டும்.சி.என்.ஜி., மற்றும் பயோ-சி.என்.ஜி., ஆகிய இரண்டு எரிபொருட்களின் செலவும் கிட்டதட்ட ஒன்று தான். எனவே, ஓட்டல்களில் இருந்து உணவு கழிவுகளை பெற்று பயோ-சி.என்.ஜி., எரிபொருள் மற்றும் அதை நிரப்ப நிலையங்கள் அமைத்து அரசு வாகனங்களை இயக்க முன்வரலாம். சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று எரிபொருட்களை பயன்படுத்துவதில் அனைவரும் ஆர்வம் காட்ட வேண்டும்.


     அரசுத்துறையினர் இத்தகைய முயற்சிகளுக்கு முன்உதாரணமாக இருக்க வேண்டும். இதன் மூலம், பெட்ரோல், டீசல் பயன்பாடு குறையும்; நாட்டுக்கு அந்நிய செலாவணி மீதமாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை கழிவு மேலாண்மை தொடர்பாக, ஓட்டல் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.


     இதில் பேசிய கமிஷனர் குமாரவேல் பாண்டியன், ''தினமும், 100 கிலோவுக்கு மேல் குப்பை உருவாக்குவோர், அவர்களே மேலாண்மை செய்து கொள்ள வேண்டும்.மாநகராட்சியிடம் வழங்கக் கூடாது. அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பான, அறிவியல் ரீதியான வழிகாட்டுதல் வழங்கப்படும்.''ஓட்டல் கழிவுகளுக்கு, கருப்பு நிற பாலித்தீன் பைகளை உபயோகிக்காமல், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, தனித்தனி பெட்டிகளில் சேகரித்து, மாநகராட்சி வாகனங்களில் ஒப்படைக்க வேண்டும். குப்பையை தொட்டியிலோ அல்லது வெளியிலோ கொட்டுவதை, சுகாதார ஆய்வாளர்கள் மூலம் கண்டறிந்தால், அபராதம் விதிக்கப்படும்,'' என்றார்.


     கோவை போன்ற நகரங்களில் தினமும் உணவுக்கழிவுகள் டன் கணக்கில் சேருகின்றன. அவற்றை பயோ- சி.என்.ஜி., போன்ற மாற்று முயற்சிகளுக்கு பயன்படுத்தினால், பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக அமையும்.


-சுரேந்தர்,கோவை கிழக்கு.


Comments