பசுமையை காலி செய்யும் கட்சிக்கொடிகள்!!

     -MMH 


     பசுமையை காலி செய்யும் கட்சிக்கொடிகள்: சென்டர்மீடியனில் தொடரும் அவலம்!!!


     உடுமலை:நகரின் பசுமைக்காக, சென்டர்மீடியனில், பராமரிக்கப்படும், செடிகளை கட்சிக்கொடி நட்டு காலி செய்யும் நடைமுறைக்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


     கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, உடுமலை நகரப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் விரிவுபடுத்தப்பட்டு, விபத்துகளை குறைக்க, சென்டர் மீடியன் கட்டப்பட்டது. வெறுமையாக இருந்த, மையப்பகுதியில், அரளிச்செடிகளை நட்டு, பராமரிக்க திட்டமிடப்பட்டது.மழை-உடுமலை தன்னார்வ அமைப்பு, நகராட்சி சார்பில், சென்டர்மீடியனில் இருந்த பழைய மண் அகற்றப்பட்டு, செம்மண் நிரப்பி, அரளிச்செடிகள் நடப்பட்டது. குறிப்பிட்ட இடைவெளியில், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவும், களைகளை அகற்றி, வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், தன்னார்வ அமைப்பினரோடு இணைந்து நகராட்சி பணியாளர்களும், பணியாற்றி வருகின்றனர்.


     இவ்வாறு, நகரின் பசுமைக்கு, பலரும் பாடுபடும் நிலையில், தங்கள் சுயநலத்துக்காக, கட்சிக்கொடிகளை சென்டர்மீடியனில் நட்டு, செடிகளை காலி செய்வதில், அனைத்து கட்சியினரும் பாரபட்சம் இல்லாமல், செயல்பட்டு வருகின்றனர்.


     நேற்று உடுமலை நகர எல்லையில் இருந்து கொழுமம் ரோடு சந்திப்பு வரை, அ.தி.மு.க., கட்சிக்கொடிகள், சென்டர்மீடியனில், நடப்பட்டது.கட்சிக்கொடிகள் இணைக்கப்பட்ட குச்சிகளை, நடுவதற்காக தோண்டப்பட்ட குழிகளால், செடிகளின் வேர்கள் பாதிக்கப்பட்டன; அவை சாயும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சென்டர்மீடியனில் கட்சிக்கொடி கட்ட, பாரபட்சம் இல்லாமல், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தடை விதித்தால் மட்டுமே, தன்னார்வ அமைப்பினரும், நகராட்சி நிர்வாகத்தினரும் மேற்கொண்ட நீண்ட கால முயற்சிக்கு, உரிய பலன் கிடைக்கும்.அரளிச்செடிகள் செழித்து வளர்ந்தால், இரவு நேரங்களில், எதிரே வரும் வாகனங்களின் கூசும் ஒளியிலிருந்து, இரு சக்கர வாகன ஓட்டிகளும் தப்ப முடியும்.


நாளையவரலாறு செய்திக்காக,


-முஹம்மது ஹனீப்,திருப்பூர்.


Comments