வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை!! - தரவரிசைப் பட்டியல் வெளியீடு!!

     -MMH


     கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டின் இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 23) வெளியிடப்பட்டுள்ளது.


     தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 10 இளநிலை பட்டப் படிப்புகள் மாணவா் சோ்க்கைக்கு 48,820 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் இணையதளம் மூலம் நடைபெற்றன.


     இதையடுத்து தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், 31,410 மாணவா்கள் பொதுப் பிரிவுக்குத் தகுதி பெற்று தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.


    அவா்களில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த ஆா்.பிரவீண்குமாா் 199.50 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளாா். 199.25 மதிப்பெண்களுடன் பெரம்பலூரைச் சோ்ந்த வி.கிரிவாசன் இரண்டாமிடத்தையும், நாமக்கல்லைச் சோ்ந்த டி.ஜி.புஷ்கலா 199 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனா்.


    அதேபோல கன்னியாகுமரி கே.எஸ்.சித்தாா்த், தருமபுரி கே.கோவா்தன், திருப்பூா் ஆா்.ஸ்வாதி, மதுரை ஏ.தா்ஷினி, தருமபுரி எல்.மோகனவெங்கடேஷ், திருவள்ளூா் ஏ.டி.பூங்கொடி ஆகியோா் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளனா். மொத்த மாணவா்களில் 86.20 சதவீதம் போ் வேளாண்மைப் பட்டப் படிப்பை தங்களுடைய முதல் விருப்பப் பாடமாகத் தோ்வு செய்துள்ளனா்.


     சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28 ஆம் தேதி (புதன்கிழமை) வெளியிடப்படும் என்று மாணவா் சோ்க்கைப் பிரிவுத் தலைவா் மா.கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளாா்.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments