அவினாசி அருகே சேலையில் தூரி ஆடிய சிறுவன் கழுத்து இறுக்கி சாவு!! - விளையாட்டுவினையானது!!

   -MMH


           திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 46). இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விஜயகுமாரி (40) என்ற மனைவியும், விஷால் (11), அத்விக்குமார் (5) என்ற 2 மகன்களும் உள்ளனர்.


            இதில் விஷால் அவினாசி அருகே ஆயிக்கவுண்டம்பாளையத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். விஜயகுமாரி ஆயிக்கவுண்டம்பாளையத்தில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று வீரக்குமார் வேலைக்கு சென்று விட்டார். விஜயகுமாரியும் சத்துணவு மையத்துக்கு சென்று விட்டார்.


             இவர்களது குழந்தைகள் 2 பேரும் வீட்டில் சேலையால் கட்டியிருந்த தூரியில் விளையாடிக்கொண்டிருந்தனர். விஷால் தூரியில் விளையாடியபோது எதிர்பாராதவிதமாக சேலை கழுத்தை இறுக்கியது. இதில் அவன் பரிதாபமாக உயிரிழந்தான். தனது அண்ணன் இறந்தது தெரியாமல் தம்பி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான். சாதாரணமாக தூரியில் விளையாடிய சம்பவம் வினையில் முடிந்தது.


              இந்த நிலையில் சத்துணவு மையத்தில் வேலை முடிந்து விஜயகுமாரியும் மற்றும் அவரது கணவர் வீரக்குமாரும் வீட்டிற்கு திரும்பினார்கள். அப்போது வீட்டில் தங்களது மகன் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


                சிறுவன் சேலையில் தூரி ஆடியபோது கழுத்து இறுக்கி பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments