கஞ்சா கடத்தலை தடுக்க போலீஸ் மோப்ப நாயுடன் தேடுதல் வேட்டை!!

     -MMH 


     கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லைப்பகுதியில் கஞ்சா கடத்தலைத் தடுக்க போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 


     தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ளது தேனி மாவட்டம் கம்பம். இங்கு நடப்பாண்டில் கஞ்சா கடத்தல், விற்பனை தொடர்பாக 62 பேர் மீது, கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் 15 பேர் சிறையில் உள்ளனர். கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 8 பேர் நன்னடத்தை சான்றை மீறியதாக ஜாமீன் ரத்து செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும் 5 பேர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டு மத்திய சிறைச்சாலையில் உள்ளனர்.


     இதையும் மீறி கம்பம் வடக்கு, தெற்கு காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமான கேரளத்துக்கு கஞ்சா கடத்தல் மறைமுகமாக நடைபெற்று வந்தது. குறிப்பாக கம்பம் வழியாக கேரளத்துக்கு செல்லும் காய்கறிகள், சரக்கு வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தி சென்றது, குமுளி மற்றும் கம்பம் மெட்டு சோதனைச் சாவடிகளில் கேரள போலீஸாரிடம் சிக்குவது தொடர்ந்தது.


     இதன் எதிரொலியாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண் தேஜஸ்வி கம்பத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்களை முற்றிலுமாக ஒழிக்க உத்தரவிட்டார்.


     உள்ளூர் போலீஸ் மட்டுமின்றி தனிப்படை போலீஸார், சார்பு ஆய்வாளர் திவான் மைதீன் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக தேடுதல் வேட்டையில் பதுக்கி வைத்திருக்கும் கஞ்சாவை கண்டறியும் வகையில் 2 வயதான மோப்ப நாய் வெற்றியும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.


     கம்பம் வாரச்சந்தை, கஞ்சா வழக்கில் சிக்கியவர்களின் வீடுகள், பழைய குற்றவாளிகள், கஞ்சா கடத்தல் நடந்த இடங்கள் மற்றும் தமிழக-கேரள எல்லை சோதனைச்சாவடி வழியாக செல்லும் சரக்கு வாகனங்கள ஆகியவை மோப்ப நாய் வெற்றி முலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த சில தினங்ளுக்கு முன்பு கம்பத்தில் நடந்த தேடுதல் பணியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை மோப்ப நாய் வெற்றி கட்டறிந்தது    குறிப்பிடத்தக்கது.


நாளைய வரலாறு செய்திக்காக,


-ஆசிக்,தேனி.


Comments