லஞ்சம் கொடுக்க! பிச்சை எடுத்து போராட்டம்..!

      -MMH


அந்தியூரில் வாரிசு சான்றிதழுக்காக கிராம நிர்வாக அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க வட்டாட்சியர் அலுவலகத்தில் பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த ஆலாம்பாளையத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரது மனைவி பிரியா. கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக் குறைவு காரணமாக பிரியா உயிரிழந்த நிலையில், வாரிசு சான்றிதழ் கோரி, அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ் என்பவரிடம் விண்ணப்பித்துள்ளனர்.


இந்நிலையில், விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட அவர் மூவாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என்று செல்வகுமார் மறுத்த நிலையில், கடந்த 8 மாதங்களாக சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்து வந்துள்ளார்.


இந்நிலையில் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த செல்வகுமாரின் தாயார் ஜோதிமணி மற்றும் மகள்கள் கனிகா, யோகாஸ்ரீ ஆகியோர் வாரிசு சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அதிகாரிக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பிச்சை கேட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கிராம நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை கோரி வட்டாட்சியரிடம் மனு வழங்கிவிட்டு அவர்கள் கலைந்துசென்றனர்.இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


-ஸ்டார் வெங்கட்.


Comments