குழாய்க்கு தனிப்பாதை! சாலையில் குழி தோண்டும் பணி இனி இருக்காது..!

     -MMH


ஸ்மார்ட் ரோட்டில் குழாய்க்கு தனிப்பாதை: குழி தோண்டும் பணி இனி இருக்காது!


திருப்பூர்;குழாய் உடைப்பு, கேபிள் பதிப்பு என ரோட்டை தோண்டி அலங்கோலப்படுத்தும் செயலுக்கு இனி வாய்ப்பு இல்லை. ஸ்மார்ட் ரோடு அமையும் இடங்களில் இதற்கென தனி பாதை அமைக்கப்படுகிறது.நகரப்பகுதி என்றாலே ரோட்டின் ஓரத்திலும் சில இடங்களில் மையப்பகுதியிலும் குடிநீர் குழாய்கள், மின்சாரம் மற்றும் தொலை தொடர்பு கேபிள் குழி தோண்டி அமைக்கப்படுவது வழக்கம்.


இதுபோன்ற இடங்களில் பழுது பார்ப்பு பணி, விரிவாக்கப் பணி நடக்கும் போது, ரோடு தோண்டி சேதப்படுத்துவதும், போக்குவரத்து அவதியும் அடிக்கடி நடக்கிறது.திருப்பூர் மாநகராட்சியில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. இதில் நகரில் அகலம் அதிகமுள்ள ரோடுகள் தேர்வு செய்து, ஸ்மார்ட் ரோடு அமைக்கும் பணி நடக்கிறது.


அவ்வகையில், மங்கலம் ரோடு - எஸ்.ஆர். நகர், தாடிக்காரமுக்கு - ஆலங்காடு ரோடு, பி.என்., ரோடு - எம்.எஸ். நகர் செல்லும், 60 அடி ரோடு, குமார் நகர் - குமரானந்தபுரம் - 60 அடி ரோடு ஆகிய ரோடுகள் ஸ்மார்ட் ரோடாக அமைக்கும் பணி நடக்கிறது.


இதில் ரோட்டின் ஒரு பகுதியில் மழை நீர் வடிகாலும், அதையொட்டி குடிநீர் குழாய், மின் மற்றும் தொலை தொடர்பு கேபிள்கள் கொண்டு செல்லும் வகையில் தனிப் பாதையும் கான்கிரீட் பெட்டி வடிவில் ரோடு பகுதி முழுவதும் அமைக்கப்படுகிறது. அதன் மீது நடைபாதை அமைத்து, டைல்ஸ் பதிக்கப்படுகிறது.இதனால், ரோட்டில் எந்த பணிக்கும் குழி தோண்டும் அவசியம் ஏற்படாது. அவ்வகையில், 'ஸ்மார்ட் ரோடு' எப்போதும் 'ஸ்மார்ட்' ஆக காட்சியளிக்கும்.


நாளையவரலாறு செய்திக்காக


-முஹம்மது ஹனீப் திருப்பூர்.


Comments