ரூ.4 கோடியில் சுத்திகரிப்பு மையம்! ஒரு நாள் கூட இயங்காத அவலம்!!

     -MMH


ரூ.4 கோடியில் சுத்திகரிப்பு மையம்: ஒரு நாள் கூட இயங்காத அவலம்!!!!


     திருப்பூர்:திருப்பூர் அருகே, நல்லாற்று கழிவு நீரை சுத்திகரிக்க நான்கு கோடி ரூபாய் செலவில் கட்டிய சுத்திகரிப்பு மையம் ஒரு நாள் கூட செயல்படாமல் வீணாக கிடக்கிறது.அவிநாசியிலிருந்து, பூண்டி வழியாக செல்லும் நல்லாறு, நஞ்சராயன்குளத்தில் வந்து சேருகிறது. நல்லாறு நீர்வழிப்பாதை முழுவதும் சாக்கடை கழிவுகள், தொழில் நிறுவன கழிவுகள் கலந்து, குளத்தின் நீர் மாசடைந்தது.இதற்காக, பொதுப்பணித்துறை சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தில், 4 கோடி ரூபாய் செலவில் திட்டம் வகுக்கப்பட்டு, சுத்திகரிப்பு மையம் கட்டப்பட்டது. தினமும், 15 லட்சம் லி., கழிவு நீர் சுத்திகரிப்பு செய்து மீண்டும் குளத்துக்கு செல்லும் வகையில் கட்டுமானம் செய்யப்பட்டது.ஆனால், இந்த மையம் இதுவரை செயல்படவில்லை. பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால், பொருட்களை திருடி சென்ற சமூக விரோதிகள், மின் இணைப்பு, கம்பி வேலி ஆகியவற்றையும், சுத்திகரிப்பு நிலைய கருவிகளையும் சேதப்படுத்தி உள்ளனர்.எஸ்.பெரியபாளையம் ஊராட்சி தலைவர் சின்னசாமி கூறுகையில், ''ஆறு ஆண்டுகளுக்கு முன், மையம் கட்டி முடிக்கப்பட்டது. ஒரு நாள் மட்டும் சோதனை ஓட்டம் நடந்தது. அதன்பின் இயங்காமல், மக்கள் வரிப்பணம், நான்கு கோடி ரூபாய் வீணாகி விட்டது. சுத்திகரிப்பு ஏதும் செய்யாமல், வழக்கம் போல் குளத்தில் கழிவு நீர் கலக்கிறது,'' என்றார்.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சுத்திகரிப்பு மையம் இயக்க நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. இது குறித்து, அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளோம். ஆண்டுதோறும் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கு, 32 லட்சம் ரூபாய் செலவாகும். அரசிடமிருந்து நிதி ஆதாரம் வந்தவுடன் இயக்கப்படும். பொருட்கள் திருட்டு போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது' என்றனர்.


நாளையவரலாறு செய்திக்காக, 


-முஹம்மது ஹனீப், திருப்பூர்.


Comments