தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் 42 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு!

 

-MMH

தமிழகத்தில் இருந்து 42 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட மூன்று வெண்கலச் சிலைகளை மத்திய அரசு தமிழக அரசிடம் நேற்று ஒப்படைத்தது.

ராமர், லக்ஷ்மணன் மற்றும் சீதை ஆகியோரின் மூன்று வெண்கலச் சிலைகளையும் டெல்லியில் உள்ள தொல்லியல் துறை தலைமையகத்தில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.

இங்கிலாந்தில் இந்த சிலைகள் மீட்கப்பட்டு, செப்டம்பர் 15ஆம் தேதியன்று லண்டன் போலீசாரால் இந்திய உயர் ஆணையத்திடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பிரகலாத் சிங் படேல் வீடியோ வாயிலாக பங்கேற்றார்.

இன்று சிலைகளை தமிழக அரசிடம் ஒப்படைத்த பிறகு தமிழக அரசின் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், லண்டன் போலீசார், இந்திய உயர் ஆணைய அதிகாரிகள் ஆகியோருக்கு அமைச்சர் பிரகலாத் சிங் படேல் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட கலாச்சார பொக்கிஷங்களை மீட்க கடந்த ஆறு ஆண்டுகளில் இந்திய தொல்லியல் துறை எடுத்த முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

இந்த மூன்று சிலைகளும் மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் அனந்தமங்களம் கோவிலில் இருந்து 1978ஆம் ஆண்டு கடத்தப்பட்டு அவற்றுக்கு பதிலாக போலி சிலைகள் பொருத்தப்பட்டதன. இம்மூன்று சிலைகளும் பல கோடி ரூபாய் மதிப்புடையவை.

-பாரூக் சிவகங்கை.

Comments