வங்கி கணக்கில் இருந்து ரூ.47.60 லட்சம் மோசடி!! சென்னை அதிகாரி உள்பட 2 பேர் கைது!!

     -MMH

இறந்துபோன வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து நூதனமான முறையில் ரூ.47.60 லட்சம் பணத்தை மோசடி செய்த முன்னாள் வங்கி அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட முன்னாள் வங்கி அதிகாரியின் பெயர் வினோத் (வயது 33). இவர் சென்னை எருக்கஞ்சேரி இந்தியன் வங்கி கிளையில் உதவி மேலாளராக பணி செய்தார். இவர் தனது நண்பர் நடராஜ் (35) என்பவருடன் சேர்ந்து தான் வேலை பார்த்த வங்கியில் ரூ.47.60 லட்சம் நூதன மோசடியில் ஈடுபட்டார்.

தான் வேலை பார்த்த வங்கி கிளையில் வாடிக்கையாளராக இருந்து இறந்து போனவர்களின் பட்டியலில் 18 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களது கணக்கிற்கு தனது நண்பர் நடராஜ் மூலம் புதிதாக ஏ.டி.எம். கார்டுகள் விண்ணப்பித்து பெற்று, அதன் மூலம் 18 பேரின் கணக்கில் இருந்தும் மேற்படி பணத்தை மோசடி செய்துள்ளார்.

இவரது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்து விட்டது. இதனால் இந்தியன் வங்கி நிர்வாகம் சார்பில் இவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் வினோத் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார்.

கூடுதல் கமிஷனர் தேன்மொழி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். வினோத்துடன் சேர்த்து அவரது நண்பர் நடராஜும் நேற்று கைது செய்யப்பட்டார். இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ருக்மாங்கதன், சென்னை.

Comments