வரூஊம்.......ஆனா வராஆ.....து! உலகமகாக் குழப்பத்தில் மாணவர்கள்!

     -MMH


தமிழகத்தில் குறித்த தேதியில் பள்ளி,கல்லூரிகளுக்குப் போவோமா இல்லையா என்று தெளிவாகத் தெரியாமல் மாணவர்கள் குழம்பித் தவிக்கின்றனர். 
 
முன்னதாக, தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. கொரோனா பரவல் தொடர்ந்து வரும் நிலையில் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியது


திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் அரசின் முடிவுக்கு உடனடியாக எதிர்ப்பைப் பதிவு செய்தனர். நவம்பர் 2ஆம் தேதி ஆந்திராவில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அங்கு இரு நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் உருவான எதிர்ப்பின் காரணமாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


முதல்வரும் அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி புதிய உத்தரவை பிறப்பித்தார். அதன்படி நவம்பர் 9ஆம் தேதி பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆகியோரிடம் தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை நடத்தி கருத்துகளைப் பெறவேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என்ற சூழல் உருவானது.


 இந்நிலையில் குடும்ப நலத்துறை ஒரு புதிய உத்தரவைப்  பிறப்பித்துள்ளது. அதில், “மாணவர்களைப் பரிசோதிக்க ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும். வைட்டமின் மாத்திரைகளைத் தயாராக வைத்திருக்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் கிருமிநாசினி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 பள்ளிகளைத் திறக்கும்போது மாணவர்களைப் பரிசோதித்தல் உள்ளிட்ட ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறையினர் தயாராக இருக்க வேண்டும் என்று குடும்ப நலத் துறை சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனால் தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்தபடி நவம்பர் 16ஆம் தேதி அன்று பள்ளிகளைத் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை.


Comments