கோவையில் மெட்ரோ ரயில்!! - முதற்கட்ட அறிக்கை தயார்!!

     -MMH


  கோவையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான முதற்கட்ட அறிக்கை தயார் செய்யப் பட்டுள்ளது. கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக கோவையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.


இந்த அறிவிப்பை தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கோவையில் மெட்ரோ ரயில் இயக்க சாத்தியக்கூறுகள் உள்ள வழித்தடங்கள் குறித்து முதற்கட்ட ஆய்வு செய்தது. அதன்படி, காரணம்பேட்டை முதல் தடாகம் சாலையில் உள்ள தண்ணீர் பந்தல் வரை 42 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு பாதையும், கணியூர் முதல் உக்கடம் வரை அவினாசி சாலை மார்க்கமாக 24 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு பாதையும் , பிலிச்சி நகராட்சியில் இருந்து மேட்டுப்பாளையம் சாலை மார்க்கமாக உக்கடம் வரையில் 24 கிலோ மீட்டருக்கு ஒரு பாதையும், கணேச புரம் பகுதியில் இருந்து சத்தி சாலை மார்க்கமாக காருண்யா நகர் வரையில் ஒரு பாதையும் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில், வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், மெட்ரோ ரயில் திட்டத்தில் அந்த வழித்தடத்தையும் இணைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, இந்த முதற்கட்ட ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது.


இந்த அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், “ கோவையில் மொத்தம் 5 வழித் தடங்களில் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதன் மொத்த தூரம் 136 கிலோ மீட்டர். இதில் அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, தொண்டாமுத்தூர் ரோடு, திருச்சி ரோடு, சத்திரோடு ஆகிய 5 வழித்தடங்கள் ஆகும். இதில் கூடுதலாக வெள்ளலூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கு செல்லும் வகையில் ஒரு மெட்ரோ வழித்தடம் ஏற்படுத்தவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தமிழக அரசிடம் இந்த அறிக்கையை அளித்ததும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்."


-ஸ்டார் வெங்கட்.


Comments