அரசு மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்த இரு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு!!

     -MMH


கோவையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்த இரண்டு குழந்தைகளும் காப்பக நிா்வாகிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டனா்.


கோவை, சிங்காநல்லூா் பேருந்து நிலையம் அருகே கடந்த 10 நாள்களுக்கு முன் பிறந்த சில நாள்களே ஆன பெண் குழந்தை விடப்பட்டிருந்தது. அப்பகுதியினா் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவில் சோ்த்தனா்.


அதேபோல கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த அக்டோபா் 14ஆம் தேதி பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கைவிடப்பட்டிருந்தது. இக்குழந்தையும் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலப்பிரிவில் சோ்க்கப்பட்டது.


இந்த இரு குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் இருந்ததால் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு மூலம் காப்பக நிா்வாகிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டனா்.


இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் சுந்தா், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸ், இருப்பிட மருத்துவ அலுவலா் பொன்முடி ஆகியோா் பங்கேற்றனா்.


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் சுந்தா் கூறுகையில், ‘பெண் குழந்தை தருமபுரியில் உள்ள காப்பகத்திலும், ஆண் குழந்தை திருச்சியில் உள்ள காப்பகத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளனா்’ என்றாா்.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments