திருப்பூர் வர்த்தக வீதிகளில் ஷாப்பிங் செய்ய பொதுமக்கள் அலைமோதல்!!

     -MMH


     திருப்பூர்:திருப்பூர் தீபாவளி கொண்டாட்டத்துக்கு தற்போதே தயாராகிவிட்டது. விடுமுறை நாளான நேற்று வர்த்தக வீதிகளில் 'ஷாப்பிங்' செய்ய பொதுமக்கள் அலைமோதினர். பனியன் நகரான திருப்பூரில் உள்ளூர் மாவட்டத்தினர் மட்டுமின்றி வெளி மாவட்டம் வெளிமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் குடும்பத்தினருடன் வசிக்கின்றனர்.


     தீபாவளி நெருங்கும் நிலையில் திருப்பூர் களைகட்டத் துவங்கிவிட்டது. நகர பகுதிகளில் உள்ள ஜவுளி, பர்னிச்சர், மொபைல், வீட்டு உபயோக பொருட்கள்,வர்த்தக நிறுவனங்கள் விழாக்கால சிறப்பு விற்பனையை துவக்கியுள்ளன.


     புதுமாடல் மொபைல்போன்கள், கட்டில், பீரோ, ஷோபா போன்ற வீட்டு உபயோக பொருட்கள், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், புதுமையான வடிவமைப்புகளுடன் கூடிய ஆயத்த ஆடை ரகங்களை அணிவகுக்கச் செய்துள்ளனர். விலை குறைப்பு பரிசு பொருட்கள், எக்சேஞ்ச் ஆபர், எளிய தவணை வசதி என, ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


     வேலை இழப்பு வருவாய் இழப்பு என கொரோனா தந்த கசப்புகள் ஒருபுறம் இருந்தாலும் அவற்றை புறந்தள்ளிவிட்டு எதிர்காலம் சிறப்பாக அமையும் பிரகாசமாக அமையும் என்கிற நம்பிக்கையுடன் மகிழ்ச்சியுடன் பண்டிகை கொண்டாட மக்கள் தயாராகிவிட்டனர்.
பனியன் தொழிலாளருக்கு வரும் 7ம் தேதி முதல் போனஸ் பட்டுவாடாவை துவக்கு கின்றன. கொரோனா அச்சுறுத்தல் உள்ளதால் நெரிசலை தவிர்க்க, பலரும், முன்னதாகவே பண்டிகை கால 'ஷாப்பிங்'கை துவக்கிவிட்டனர்.


     தொழிலாளர்களுக்கு, வாரம்தோறும் சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் சம்பளம் பெற்ற தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஆடை, அணிகலன்கள் வாங்குவதில் அதிக ஆர்வம்காட்டினர். புதுமார்க்கெட் வீதி, காமராஜர் ரோடு, திருப்பூர் - பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு, அவிநாசி ரோடு, குமரன் ரோடு பகுதிகளில் உள்ள ஜவுளி, பர்னிச்சர், செல்போன், நகை விற்பனை கடைகளில் நேற்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நகரில் பிரதான ரோடுகளில் இருசக்கரம், நான்கு சக்கர வாகன போக்குவரத்து அதிகரித்து திருப்பூரில் தீபாவளி கொண்டாட்டத்துக்கான ஆயத்தம் தற்போது துவங்கிவிட்டது.அபாயம் மறக்காதீங்க! பண்டிகை கொண்டாட்டத்தில் மக்கள் பலரும் கொரோனாவை மறந்துவிடுகின்றனர். சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. ஒருவர் மீது ஒருவர் உரசிக்கொண்டு, ஆடை வாங்க முண்டியடிக்கின்றனர். இதனால், வைரஸ் தொற்று அபாயம் உள்ளது. பொதுமக்கள் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். முக கவசம் தவறாமல் அணியவேண்டும். கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவேண்டும். வர்த்தக பகுதிகளில் சமூக இடைவெளி கடைபிடிப்பதற்கான வட்டங்கள் வரையப்படவேண்டும். முக கவசம் அணியாதோரை அனுமதிக்கக்கூடாது.


நாளையவரலாறு செய்திக்காக, 


-முஹம்மது ஹனீப், திருப்பூர்.


Comments