குமுளியில் போக்குவரத்து நெரிசல் விபத்து!! - பொதுமக்கள் அச்சம்!!

     -MMH


கம்பம்: தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்தில் உள்ள ஏலத் தோட்டங்களுக்கு செல்லும் ஜீப் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய பகுதிகளில் இருந்து அருகே உள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு ஆண், பெண் தொழிலாளர்கள் ஜீப் வாகனங்கள் மூலம் நாள்தோறும் சென்று வருகிறார்கள்.


பொதுமுடக்கம் காரணமாக தற்போது குமுளி வழியாக மட்டுமே அனைத்து ஜீப் வாகனங்களும் அனுமதிக்கப்படுகின்றன. இதனால் ஏலத்தோட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எரிபொருள் செலவு, பயண நேரம், பொருள் விரயம் ஏற்படுகிறது. 


இதற்கிடையில் தமிழக - கேரள எல்லையில் சோதனைச் சாவடியைக் கடந்து செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் குமுளி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒருவரையொருவர் முந்திச் செல்வதால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 


இதுபற்றி தோட்ட விவசாயி சொக்கராஜா கூறுகையில், கம்பம்மட்டு மலைச் சாலை வழியாக ஏலத் தோட்டங்களுக்கு ஜீப் வாகனங்களை அனுமதித்தால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் தவிர்க்கப்படும். மாவட்ட நிர்வாகத்தினர் கலந்து பேசி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். 


நாளைய வரலாறு செய்திக்காக,


-ஆசிக்,தேனி.


Comments