ஒதுங்கப் போனாலும் விடாத ஓநாய்கள்......! திறந்தவெளிக் கழிப்பிட விபரீதம்....பாவம் பெண்கள்!

     -MMH


கடந்த ஜனவரியில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் அப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றவரைக்   காணாததால் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை கடத்தி தன்னுடைய வீட்டில் அடைத்து வைத்து இரண்டு நாட்களாக பலாத்காரம் செய்து வந்தது தெரிய வந்தது.


அதேபோல், மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரத்திலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷிரூர் தாலுகாவில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 37 வயதான பெண் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அவரைப்  பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் ஒருவர் அப்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது அவர் கூச்சலிட்டதால், மர்ம நபர் அந்த பெண்ணை அடித்துத்  தாக்கியுள்ளார். எங்கு தன்னை போலீசில் அடையாளம் காட்டி விடுவாரோ என பயந்து போன அந்த மர்ம நபர் பெண்ணின் இரு கண்களையும் கடுமையாகக்  காயப்படுத்திவிட்டு தப்பியுள்ளார்.


சம்பவம் அறிந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, நடந்த முதற்கட்ட சிகிச்சைக்கு பிறகு, அந்த பெண் ஒரு கண்ணின் பார்வையை முழுமையாக இழந்துவிட்டதாகவும், மற்றொரு கண் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசாருக்கு, குற்றவாளியை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது மர்ம நபர் என்று வழக்கு பதிவு செய்து, சம்பவம் நடந்த இடத்தில் வசிப்பவர்களை விசாரித்து வருகின்றனர்.


இயற்கை உபாதை கழிக்க செல்லும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும், பலாத்காரம் செய்யப்படுவதும் நாட்டில் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக கிராம புறங்களில் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிப்பதை நிறுத்தவே கிராம புறங்களில் கழிப்பறைத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதனால் தெரிந்தோ, தெரியாமலேயோ பல குற்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் தேசிய மயமான இந்த திட்டம் இன்னமும் பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்படாமல் உள்ளன.


கடைக்கோடி கிராமங்களே இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.i  இப்பகுதிகளில், பெண்கள் கூட்டமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பயந்துகொண்டே இயற்கை உபாதையை கழிக்க செல்கின்றனர். அதுவே ஒரு பெண் தனிமையில் சென்றால் அதை சாதகமாக்கிக் கொள்ளும் நபர்கள் வன்கொடுமைச்  செயலில் ஈடுபடுகிறார்கள். விஷயத்தை வெளியில் சொன்னால் அவமானம் ஏற்பட்டு விடுமோ என்று பயந்த பெண்கள் இக்கொடுமையை மறைத்து விடுவதால், குற்றவாளிகள் இரவோடு இரவாகத் தப்பி விடுகின்றனர்.


கிராமப்புறங்களில் கழிப்பறையைக் கட்டாயமாக்கி பரிதாபப்பெண்களின் மானம் காக்க ஆவன செய்யுமா இவ்வரசு?


-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை.


Comments