நிவர் புயல் டெல்டா மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் கனமழை..!

-MMH 

நிவர்' புயல் கடலூரில் கரையைக் கடந்தாலும், டெல்டா மாவட்டத்தில், சூறைக் காற்றுடன் கனமழை அதிகமாகப் பெய்யக் கூடும். மேலும், புயலின் மொத்த விட்டம் 400 கிலோ மீட்டராக இருக்கும்," என்கிறார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "வங்கக் கடலில், தெற்கு மத்திய பகுதியில், உருவாகியிருக்கக் கூடிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மறுதினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி, பிறகு புயலாக உருவெடுக்க இருக்கிறது.

இது, இலங்கையின் வடகிழக்குப் பகுதியில், நல்ல ஒரு தீவிரத்தை எடுத்துக் கொண்டு, தமிழகத்தின் கரையையொட்டி மிகவும் நெருக்கமாக வந்து, வானிலை ஆய்வு மையம் உள்ள காரைக்காலுக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும், நாகப்பட்டினம் மாவட்டத்திலும் கரையைக் கடக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகக் கூடுதலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம். தற்பொழுது உருவாகக் கூடிய இந்தப் புயல், படிப்படியாக முன்னேற்றமாகி மிக வேகமாகச் சில நாட்களிலேயே, அடுத்தடுத்த நிலையை அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புயலானது கடலூரில் கரையைக் கடந்தாலும் அதன் வெளிச் சுற்று கோடியக்கரையில் இருக்கும். அடுத்த பக்கம் மாமல்லபுரத்தில் இருக்கும். இதன் மொத்த விட்டம், 400 கிலோ மீட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலூரில் கரையைக் கடந்தாலும் டெல்டா மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் கன மழை அதிகமாக இருக்கும்.

 இதனால் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வசதிகளையும் செய்துகொள்ள வேண்டும். வானிலை மையம் விரைவிலேயே நாகப்பட்டினம் மாவட்டத்திற்குப் பெரும் பாதிப்புகள் வரலாம் என, அறிவிப்புகள் வெளியிடக் கூடும். ஆகவே மக்கள் தென்னை மட்டைகளை வெட்டுவது. வீட்டின் சீட்டுகளை பிரிப்பது உள்ளிட்ட பணிகளைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும்" என மிக வருத்தத்துடன் தெரிவித்தார்.

'கஜா' புயலின் கோர முகமே இன்னும் மாறிடாத டெல்டா மாவட்டத்தில், மீண்டும் ஒரு புயலா, என விவசாயிகளும், பொதுமக்களும் வேதனையில் முழ்கியுள்ளனர்.                 

-சுரேந்தர்.

Comments