வேளை வந்தால் விதியும் மாறும்!

-MMH

கோவையில் ரோட்டோரத்தில் படுத்துறங்கி, கிடைத்ததை  உண்டு வாழ்ந்த சிறுவன் இன்று  கனடா கோடீஸ்வரர்களுள் ஒருவர்.  மலரும் நினைவுகளை  நெகிழ்ச்சியுடன்  பகிர்ந்து கொள்கிறார் ஷாஸ் சாம்சன்.

கனடா, டொரோண்டாவை சேர்ந்தவர் ஷாஸ் சாம்சன், 50 வயதான இவர் கனடாவின் சிறந்த சமையல்கலை  நிபுணர். இவர் சென்ற ஆண்டு சொந்தமாக ஒரு பெரிய உணவகத்தைத் துவக்கினார். கொரோனா காரணமாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தனது சிறுவயது கஷ்டங்களே  இக்கொரோனா காலகட்ட  பாதிப்புகளை எதிர்கொள்ள  அனுபவமாக இருப்பதாகக் கூறிய இவர் , தனதுஎட்டு வயதில் கோவையில் ரோட்டில் படுத்துறங்கி, குப்பைத்  தொட்டியில் விழுந்த  எச்சிலை உண்டு வாழ்ந்ததை கனடா ஆன்லைன் மீடியாவில் மனந்திறந்திருக்கிறார்.

இதுதொடர்பாக ஷாஸ் சாம்சன் கூறியுள்ளதாவது: தென்இந்தியாவில், ஜவுளி நகரமான கோவையில், ரயில்வே டிராக்கை ஒட்டியிருந்த குடிசைப் பகுதியில் பெற்றோர், சகோதரர்களுடன் வசித்து வந்தேன். தந்தை பீடி சுற்றும் தொழிலாளி. ஒருநாள் பஸ் ஸ்டாண்டில், என்னை என்  சகோதரர்கள் விட்டுவிட்டுச்  சென்றனர். அதன்பின், அவர்களை நான் பார்க்கவில்லை. எங்கு செல்வது, என்ன செய்வது என்று தெரியாமல் ரோட்டில் சுற்றி திரிந்தேன். அங்குள்ள ஓட்டல் முன் தினமும் அமர்ந்து கொள்வேன். அங்கு குப்பைத்  தொட்டியில் மீதமாகும் ஒட்டல் உணவுகளைக்  கொட்டுவார்கள். அதை சாப்பிட்டு வளர்ந்து வந்தேன். இரவு நேரங்களில் சினிமா தியேட்டர் முன் படுத்துத்  துாங்கினேன். என்னைப்  போல் பலரும் படுத்திருப்பார்கள். நான் தான் அந்த இடத்தை சுத்தம் செய்து வைப்பேன். பின், இரவு அனைவரும் அங்கு படுத்துத் துாங்குவோம்.

ஒரு நாள் குழந்தை நல அதிகாரிகள் என்னைப்  பார்த்து விசாரித்து, மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்த ஒரு நிமிடம் தான், என் வாழ்க்கையை மாற்றியது. அந்த காப்பகத்தில் எட்டு வயதாக இருந்த என்னை, 1979ம் ஆண்டு கனடா நாட்டைச்  சேர்ந்த சாம்சன் தம்பதியினர்  தத்தெடுத்தனர். என்னை கனடா அழைத்து வந்து செல்லமாக, பாசத்துடன் வளர்த்தனர். எனது விருப்பம்போல் படிக்க வைத்தனர். சிறுவயதில் உணவுக்காக அலைந்ததால், பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என, விரும்பினேன். இதன்படி எனது வளர்ப்புப் பெற்றோர் சமையல் கலைப் பிரிவு படிக்க வைத்து, தற்போது பெரிய ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறேன். நான் எப்போதும் நேரத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்.

அன்று நான் ரோட்டில் சுற்றித்திரிந்த அந்த நேரத்தில் குழந்தைகள் நல அதிகாரிகள் பார்க்காவிட்டால், எனது வாழ்க்கை இப்படி மாறியிருக்காது. தற்போது என்னைபோல் உள்ள, 22 குழந்தைகளைத்  தத்தெடுத்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறேன். இதேபோல் சாம்சன் தம்பதியினர் எனக்கு உதவியதால் தான் என்னால் இப்போது மற்றவர்களுக்கு உதவ முடிகிறது.இவ்வாறு, நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கோவையில் குப்பை தொட்டி உணவை உண்டு, ரோட்டோர குழந்தையாக இருந்த சாம்சன், தற்போது சிறந்த சமையல் கலைஞராக மாறி, பெரிய ஓட்டல் நடத்துவது, வேளை வந்து விட்டால் போதும் நொடிப் பொழுதில் தலையெழுத்தே மாறி விடும் என்பதற்குச் சான்றாகும்.  அப்படித்தானே!

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை.   

Comments

நெகிழ்ச்சி அம்மா.
பகிர்விற்கு நன்றி!.

என்னைப் போலவே ஒவ்வொருவருக்கும் ஒரு திருப்பு முனை மற்றும் மற்றவர்கள் வாழ்வில் திருப்பு முனை ஏற்படுத்தும் முனைப்பும் இருக்கும் என எண்ணுகிறேன்.

அருமையான எழுத்து நடை. சமூக மாற்றம் இத்தகைய பதிவுகளால் ஊக்குவிக்கப்படும்.

இன்றைய செய்தி.
நாளைய வரலாறு.

வரலாறு படைப்போம்.
நன்றி.

அடியேன்,
முனைவர். வெ.சந்திரசேகரன், தலைமையாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி,
கொந்தளம், நாமக்கல் மாவட்டம்.
chandrache@gmail.com