தமிழக எம்.பி.க்களுக்கு இந்தியில் கடிதம்!! மத்திய அரசை எதிர்த்து வழக்கு..!

-MMH

தமிழக அரசுக்கும், தமிழக எம்.பி.க்களுக்கும் மத்திய அரசு இந்தியில் கடிதம் அனுப்புவதை எதிர்த்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் பொதுநல வழக்கு!

தமிழக அரசுக்கும், தமிழக எம்.பி.க்களுக்கும் மத்திய அரசு இந்தியில் கடிதம் அனுப்புவதை எதிர்த்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழக அரசு, எம்.பி.க்கள், தமிழக மக்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் அனுப்ப உத்தரவிட கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு ஆளெடுக்கும் தேர்வு மையங்களை தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அமைக்கவேண்டும் என்று கோரி மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராய்க்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் ஆங்கிலத்தில் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராய், கடந்த நவம்பர் 9-ம் தேதி வெங்கடேசனுக்கு இந்தி மொழியில் கடிதம் அனுப்பியிருக்கிறார். இந்நிலையில், தமிழ்நாட்டு எம்.பி. ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்துக்கு மொழி பெயர்ப்பு இல்லாமல் இந்தியில் பதில் தருவது விதி மீறல் என்றும் குறிப்பிட்டு, அந்த விதிகளை மேற்கோள் காட்டி, வெங்கடேசன் எம்பி மீண்டும் ஒரு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “நவம்பர் 9ம் தேதி நீங்கள் எழுதிய கடிதம் வந்தது. அது இந்தியில் இருந்ததால் அதில் என்ன இருக்கிறது என்று அறியமுடியவில்லை. என்னுடைய கடிதத்துக்கு இந்தியில் பதில் அளித்ததன் மூலம் சட்ட, நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரியில் சி.ஆர்.பி.எப். ஆளெடுப்புத் தேர்வு மையங்களை அமைக்கவேண்டும் என்று கோரி அக்டோபர் 9ம் தேதி உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.

அதற்குப் பதில் அளித்து நீங்கள் இந்த கடிதத்தை எழுதியிருப்பதாக கருதுகிறேன். தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தி அலுவல் மொழியாகத் திணிக்கப்படாது என்று 1963ம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அளித்த வாக்குறுதி உங்களுக்குத் தெரியும்.

இது தொடர்பாக ஒரு பொது விவாதம் நடந்து, அதில் ஒரு கருத்தொற்றுமை ஏற்பட்டு, அதன் விளைவாக நேருவின் வாக்குறுதி வந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்த பின்னணியில், அந்த வாக்குறுதி மீண்டும் 1965ம் ஆண்டு அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியால் உறுதிப்படுத்தப்பட்டது. மீண்டும் 1967ம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டத்தில் திருத்தம் செய்து அதை உறுதிப்படுத்தினார் இந்திரா காந்தி.

1976ம் ஆண்டின் அலுவல் மொழி விதிகளில் இருந்து சில பாகங்களை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். இதன் முழுப் பெயர்: அலுவல் மொழிகள் (ஒன்றிய அரசின் அலுவல்பூர்வ பணிகளுக்காக பயன்படுத்துதல்) விதிகள் -1967 (1987, 2007, 2011 ஆண்டுகளில் திருத்தப்பட்டது)’

“அலுவல் மொழிகள் (ஒன்றிய அரசின் அலுவல்பூர்வ பணிகளுக்காக பயன்படுத்துதல்) விதிகள் -1967 என்று இந்த விதிகள் அழைக்கப்படலாம். தமிழ்நாடு தவிர இந்தியா முழுமைக்கும் இந்த விதி விரிவுபடுத்தப்படலாம். இந்த விதியின்படி அலுவல் மொழி சட்டத்தில் இருந்து விதிவிலக்கு பெறுவதற்கு தமிழ்நாட்டுக்கு சட்ட உரிமை உள்ளது என்பது தெளிவாக உள்ளது. மொழிப் பிரச்சனையில் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் விவகாரத்தில்,

தமிழ்நாடு ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கிறது என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். ‘சி’ தொகுப்பு என்று வகைப்படுத்தப்பட்டுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதும்போது அது ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் என்று அந்த விதிகளில் இடம் பெற்றிருக்கின்றது. எனவே, எனக்கு இந்தியில் பதில் எழுதியதன் மூலம் இந்த விதிகள் மீறப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் தமிழக அரசுக்கும், தமிழக எம்.பி.க்களுக்கும் மத்திய அரசு இந்தியில் கடிதம் அனுப்புவதை எதிர்த்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

-பாரூக் சிவகங்கை.               

Comments