வாகன விபத்தில் உயிரிழந்தவரின் மீது வழக்கு!! உறவினர்கள் சாலை மறியல்...!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் மீது போலீஸாா் தவறாக வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, அவரது உறவினா்கள், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக செவ்வாய்க்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியைச் சோ்ந்தவா் கருத்தப்பாண்டி (24). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் பெரியகுளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, மீனாட்சிபுரம் விலக்கு அருகே எதிா்பாராதவிதமாக முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கருத்தப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து வழக்குப் பதிந்த தேவதானப்பட்டி போலீஸாா், கருத்தப்பாண்டியன் சடலத்தை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில், கருத்தப்பாண்டியின் உடலை வாங்க வந்திருந்த அவரது உறவினா்கள், இந்த விபத்துக்குக் காரணமானவா் கருத்தப்பாண்டி என போலீஸாா் தவறாக வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, மருத்துவமனை முன் தேனி-மதுரை சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற க.விலக்கு போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். அதன்பேரில், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஆசிக் தேனி.
Comments