தஞ்சை அருகே இளைஞர் படுகொலை!!

  -MMH

     தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கள்ளப்புலியூர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் செல்வம்(வயது 53). தனியார் நிதி நிறுவன ஊழியர். இவருடைய மகன் மணிகண்டன்(22), என்ஜினீயரிங் பட்டதாரி.  அதே ஊரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் விக்னேஷ்வரன்(28). இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. செல்வம் தரப்பு பணத்தை திருப்பி தராததால் விக்னேஷ்வரன் தரப்புக்கும், செல்வம் தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் செல்வத்தின் மகன் மணிகண்டன் தஞ்சை அருகே உள்ள நெல்லித்தோப்பு கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண விழாவுக்கு வந்திருந்தார். நெல்லித்தோப்பு-கோனூர் சாலையில் சென்ற அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு வந்த அம்மாப்பேட்டை போலீசார், கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்குஅனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், நிதி நிறுவனம் மூடப்பட்டதால் ஏற்பட்ட மோதலில் விக்னேஷ்வரன் மற்றும் அவருடைய தம்பிகள் அன்பு(26), ஆனந்த்(21) ஆகியோர் மேலும் சிலருடன் சேர்ந்து மணிகண்டனை அரிவாளால் வெட்டிக்கொன்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ்வரன், அன்பு, ஆனந்த் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தொடர்புடைய நெல்லித்தோப்பு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அய்யாசாமி மகன் புண்ணியமூர்த்தி(35), கும்பகோணம் சிங்காரதோப்பு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் பிரபாகரன்(21), கும்பகோணம் கொரநாட்டுகருப்பூர் வையாபுரி தெருவை சேர்ந்த காளிமுத்து மகன் சங்கர்(28) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் இரண்டு நாட்களாக பரபரப்பு நிலவியது.

 நாளைய வரலாறு செய்திக்காக,

-ராஜசேகரன்,தஞ்சாவூர்.

Comments