நிவர் புயல் எதிரொலி!! சென்னையில் விடிய விடிய கனமழை!!

 

-MMH

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக சென்னையில் இரவு முதல் அதிகாலை வரை விட்டு விட்டு கனமழை கொட்டித் தீர்த்தது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இன்று இது புயலாக மாறி நாளை பிற்பகல் காரைக்கால்-மகாபலிபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு தொடங்கி அதிகாலை வரை சென்னையில் பிரதான இடங்கள் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை விட்டு விட்டு கொட்டித் தீர்த்தது.

சென்னையில் சைதாப்பேட்டை, கிண்டி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் கனமழை பெய்தது. பூவிருந்தவல்லி, அம்பத்துார், ஆவடி, மீஞ்சூர், திருவொற்றியூர், துரைப்பாக்கம், சேப்பாக்கம், திருவான்மியூர், செம்பரம்பாக்கம் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

சென்னையின் புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நங்கநல்லூர், கீழ்க்கட்டளை, தாம்பரம், கூடுவாச்சேரி, வண்டலுார், பம்மல், அனகாபுத்துார் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது.

பட்டினப்பாக்கம் பகுதியில் காற்று பலமாக வீசி வருகிறது. இதனால் கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. வழக்கமான இடத்தை தாண்டி கடல் அலைகள் வந்த வண்ணம் இருந்தன.

-பாரூக் சிவகங்கை.

Comments