கோவையில் கொள்ளையடித்த ஆந்திர கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!!

கோவை: கருமத்தம்பட்டி பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஆந்திர மாநில கொள்ளையர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 24 பவுன் தங்க நகைகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் தொடர்ச்சியாக வீடு புகுந்து திருடுதல் மற்றும் நகை பறிப்பு சம்பவங்கள் ஈடுபட்டதை அடுத்து கருமத்தம்பட்டி போலீசார் அவிநாசி சாலையில் சென்னியாண்டவர் கோவில் அருகே இன்று காலை வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில்,

அவர்கள் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்த கோட்டையா என்பவரது மகன் சீனு ( 20), கரீம் என்பவரது மகன் சுப்பாராவ் ( 20), வெங்கடேஷ் என்பவரது மகன் அங்கம்மா ராவ் (32), மற்றும் அவரது மனைவி அங்கம்மா (28 ) என்பது தெரியவந்தது.

இவர்கள் நான்கு பேரும் கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் கருமத்தம்பட்டி சின்னமோப்பிரிபாளையத்தில் ஜடி ஊழியர் யுவராஜ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்திலும், அரசு ஊழியர் நாகமணி என்பவரிடம் 6 பவுன் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் அவர்களிடமிருந்து 24 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது கைது செய்யப்பட்டவர்களுக்கும் நேற்று முன்தினம் சூலூரில் கைது செய்யப்பட்ட 4 கொள்ளையர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

மேலும் இவர்கள் இதுபோன்று மாவட்டத்தில் வேறு எங்காவது கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய கருமத்தம்பட்டி போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

-சுரேந்தர்.

Comments