தடுப்பணையாகும் தரை மட்ட பாலங்கள்!! - போக்குவரத்து முடங்குவதால் கவலை!!!

       -MMH

உடுமலை;அகல ரயில்பாதையின் குறுக்கே, கட்டப்பட்டுள்ள தரை மட்ட பாலங்களில், மழை நீர் தேங்குவதை தவிர்க்க, ரயில்வே துறையினர் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.திண்டுக்கல்-பாலக்காடு அகல ரயில்பாதையை ஒட்டி, உடுமலை பகுதியை சேர்ந்த பல கிராமங்கள் உள்ளன. இதில், மாவட்ட முக்கிய ரோடுகள் அமைந்துள்ள பகுதியில் மட்டும், அகல ரயில்பாதையை, அனைத்து வாகனங்களும், கடக்க, பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.ஆனால், கிராமப்புற ரோடுகள் கடக்கும் பகுதியில், முறையான திட்டமிடல் இல்லாமல், கட்டப்பட்ட பாலங்கள் மழைக்காலங்களில், மழை நீர் தேங்கி, தடுப்பணைகளாக மாறி வருகின்றன.இதனால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல், கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, விவசாயிகள், தங்கள் விளைநிலங்களுக்கு, இடுபொருட்களை கொண்டு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். உடுமலை நகரிலுள்ள, மேம்பாலம் உட்பட இடங்களில், நகராட்சியுடன் இணைந்து, ரயில்வேத்துறை சார்பில், மோட்டார் ரூம் அமைத்து, பாலத்தில், தேங்கும் தண்ணீரை வெளியேற்றுகின்றனர்.அந்தியூர், ராகல்பாவி உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களிலுள்ள தரைமட்ட பாலங்களில், இந்த வசதி இல்லை. சமீபத்தில், பெய்த மழைக்கு, தேங்கிய தண்ணீர், வெளியேறாமல், தடுப்பணை போல் தேங்கியுள்ளது.நகரைப்போல, தண்ணீரை வெளியேற்றும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினால், கிராம மக்கள் மழைக்காலத்திலும் பாதிப்பின்றி பயன்பெறுவார்கள்.

நாளையவரலாறு செய்திக்காக,

-முஹம்மது ஹனீப்,திருப்பூர்.

Comments