டப் திட்ட சலுகை கைக்கு எட்டுவது எப்போது? பின்னலாடை பிரின்டிங் தொழில் துறையினர் எதிர்பார்ப்பு!!


 -MMH

திருப்பூர்;அறிவிக்கப்பட்டு ஒரு மாதமாகியும் இன்னும் 'டப்' திட்ட சலுகை வழங்கப்படாததால், திருப்பூர் பிரின்டிங் துறையினர் கவலை அடைந்துள்ளனர்.நிறுவனங்களின் தொழில்நுட்ட மேம்பாட்டுக்கு கைகொடுக்கும்வகையில், மத்திய அரசு, திருத்தி அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தை (ஏ-டப்) செயல்படுத்தி வருகிறது. ஆடை உற்பத்தி, மற்ற அனைத்து ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கும் இத்திட்ட சலுகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பிரின்டிங் ஜாப்ஒர்க் நிறுவனங்க ளுக்கு மட்டும் இச்சலுகை மறுக்கப்பட்டுவந்தது.'டப்' திட்டத்தில் சலுகை வழங்க வேண்டும் என, திருப்பூர் பிரின்டிங் துறையினர் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைவிடுத்தனர். ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலும், பிரின்டிங் துறையினரின் இந்த கோரிக்கையை ஜவுளித்துறை கவனத்துக்கு கொண்டு சென்றது.இதனால், கடந்த அக்., மாதம் நடந்த மத்திய ஜவுளி துறையின் தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில், பிரின்டிங் நிறுவனங்களுக்கு 'ஏ-டப்' திட்ட சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டது; அதற்கான அறிவிப்பும் உடனடியாக வெளியிடப்பட்டது. அறிவிப்பு வெளியாகி ஒரு மாதமாகியும் இன்னும், பிரின்டிங் நிறுவனங்களுக்கு, 'டப்' திட்ட சலுகை தொகை விடுவிக்கப்படவில்லை. ஏற்கனவே கொள்முதல் செய்த மெஷின்களுக்கு, சலுகை தொகை பெறமுடியாத நிலை தொடர்வதால், திருப்பூர் பிரின்டிங் துறையினர் கவலை அடைந்துள்ளனர். 

திருப்பூர் பிரின்டிங் துறையினர் கூறியதாவது: "தொடர் கோரிக்கையை அடுத்து, பிரின்டிங் நிறுவனங்களுக்கு, நிலுவையில் உள்ள 'ஏ-டப்' திட்ட சலுகை வழங்கப்படும் என, கடந்த அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் பிரின்டிங் நிறுவனங்களுக்கு, 'டப்' திட்ட சலுகை விடுவிக்கப்படவில்லை. ஜவுளித்துறை அதிகாரிகளிடம் கேட்டால், வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் வெளியிடப்படவில்லை; காத்திருங்கள் என்கின்றனர்.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, 100 கோடி ரூபாய் அளவிலான 'டப்' சலுகை தொகை வழங்கப்படாமல், நிலுவையில் உள்ளது. கொரோனாவால் நிதி நெருக்கடி அதிகரித்துள்ள இச்சூழலில், மத்திய அரசு சலுகை விரைந்து கிடைத்தால்தான், நிறுவனங்கள் சிறப்பாக இயங்க முடியும்.தொழில்நுட்பங்களை மேம்படுத்தி, வர்த்தகத்தை வசப்படுத்தமுடியும். மேலும் தாமதிக்காமல், வழிகாட்டு நெறிமுகளை விரைவில் வெளியிட்டு, பிரின்டிங் நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள 'ஏ-டப்' திட்ட சலுகையை அரசு உடனடியாக விடுவிக்கவேண்டும்." இவ்வாறு, அவர்கள் கூறினர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-முஹம்மது ஹனீப், திருப்பூர்.

Comments