கோவையில் தொடரும் தற்கொலைகள்.....! ஆட்கொல்லியாகும் ஆன்லைன் வர்த்தகம்!

      -MMH


கோவை, ராமநாதபுரம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால். ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து வந்தார். அவரது மனைவி உமா அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். தனபால் அவிநாசி சாலை, அண்ணாசிலை அருகே உள்ள ஓர் தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.


அதில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு, லட்சகணக்கான பணத்தை இழந்துள்ளார். இதனால், விரக்தியில் இருந்த தனபால், நேற்று காலை அந்த நிறுவனத்தின் அருகே சென்று, தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். பிறகு அதில் ஏறி அமர்ந்து பெட்ரோல் ஊற்றி, தீவைத்து தற்கொலை செய்துள்ளார். இறப்பதற்கு முன்பு தனபால் மரண வாக்குமூலத்தை எழுதியுள்ளார்.



அந்த கடிதத்தில் தனபால்,``எனது பிசினஸுக்காக மனைவி பெயரில் ரூ.14 லட்சம் (60 தவணைகள்) பர்ஸ்னெல் லோனாக வாங்கியிருந்தேன். கொரோனா பயம் காரணமாக, பங்கு சந்தையில் ஏற்பட்ட சரிவால் இந்தாண்டு ரூ.20 லட்சத்தை இழந்துவிட்டேன். மத்திய அரசு அறிவித்த கடன் ஒத்திவைப்பு திட்டத்தைப் பயன்படுத்தி, ஏப்ரல் – ஆகஸ்ட் 5 மாதங்கள் தவணை கட்டுவதைத் தள்ளிப்போட்டேன். அந்த 5 மாதங்கள் சலுகையைப்  பயன்படுத்தியதற்காக கூடுதலாக 4 மாதங்கள் தவணை கட்டச் சொல்கின்றனர்.



கஷ்டப்பட்டு செப்டம்பர், அக்டோபர் மாதத் தவணைகளைக்  கட்டிவிட்டேன். 20 நாள்களுக்கு முன்பு என் மாமனார் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என் மனைவி ஊதியத்தில் சி.பி.எஸ் (பங்களிப்பு, ஓய்வு ஊதியம்) சரியாக வரவு வைக்கவில்லை. கட்டிய பணத்தையே சரியாக வரவு வைக்காத நிர்வாகம், பின்னாளில் அதை எப்படி மொத்தமாக கொடுக்கும்?


சி.பி.எஸ்ஸில் லட்சகணக்கில் பணம் இருந்தும் என் மாமனார் இறந்தபோது, மனைவி பணத்துக்குக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததை என்னால் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. சி.பி.எஸ்ஸில் உள்ள அரசு ஊழியர்கள், கொஞ்சம் உங்களது பாதுகாப்பைப் பற்றி சிந்தியுங்கள். சி.பி.எஸ் குளறுபடிக்கு குரல் கொடுத்து, போகும், முதலும் கடைசியுமான உயிர் எனதாக இருக்கட்டும்.


என் மரணத்துக்கு மத்திய அரசும், உயர் நீதிமன்றமும் என்ன சொல்லப் போகிறது?
எனது மரணத்துக்குப் பிறகாவது உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் கடன் ஒத்திவைத்து வட்டி ஏற்றிய வழக்கில், நீதிபதிகள் ஒரு நல்ல தீர்ப்பைத் தருவார்கள் என்று நம்புகிறேன். என் மனைவி மற்றும் மகனுக்கு தீராத துன்பத்தைத் தந்துவிட்டு அவர்களை நட்ட நடு வீதியில் தவிக்கவிட்டு செல்லும் இந்த பாவி..” என்று கூறப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை.


Comments