நெருங்கியது தீபாவளி.. களைகட்டியது காதர்பேட்டை!!!

     -MMH


     திருப்பூர்:தீபாவளி நெருங்கியுள்ள நிலையில் காதர்பேட்டையில் ஆடை வர்த்தகம் சூடுபிடித்துள்ளது. திருப்பூர் காதர்பேட்டையில், 700க்கும் மேற்பட்ட மொத்த சில்லரை ஆடை வர்த்தக கடைகள் உள்ளன. குழந்தைகள், சிறுவர், ஆண், பெண்களுக்கான அனைத்து வகை ஆடை ரகங்களும் இங்கு விற்கப்படுகின்றன.


     திருப்பூர் மட்டுமின்றி கோவை,ஈரோடு, சேலம், கரூர் போன்ற வெளி மாவட்டங்கள், ராஜஸ்தான், குஜராத், ஒடிசா போன்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்த குறு, சிறு வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்கள் காதர்பேட்டையில் ஆடை ரகங்களை வாங்கிச் செல்வது வழக்கம். ஊரடங்கால் கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை காதர்பேட்டை கடைகள் அடைக்கப்பட்டன. மே 6ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனாலும் எதிர்பார்த்த அளவில் ஆடை வர்த்தகம் நடைபெறவில்லை.


     தீபாவளிக்கு இன்னும் 11 நாட்களே உள்ளன.காதர்பேட்டை வியாபாரிகள் தீபாவளிக்காக தங்கள் கடைகளில் அதிகளவு ஆடை ரகங்களை அணிவகுக்கச் செய்துள்ளனர். பல்வேறு வண்ணங்களில் டி சர்ட், காலர் சர்ட், பேன்ட், பெர்முடாஸ், இரவு நேர ஆடை, ஆண், பெண் உள்ளாடைகள், சுடிதார் ரகங்கள், குழந்தைகளுக்கு விதவிதமான ஆடைகள் என எல்லாவகை ஆடை ரகங்களும் உள்ளன. நஞ்சப்பா பள்ளி அருகே ரோட்டோரம் முழுதும் தற்காலிக கடைகள் முளைத்துள்ளன. ஓவன் சர்ட், பேன்ட், ஜீன்ஸ், சுடிதார், சேலை ரகங்களை கட்டிலில் வைத்து விற்கின்றனர்.பண்டிகை நெருங்கும் நிலையில் பலரும் ஆடை ரகங்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். காதர்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை முதல் மாலை வரை கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இது வர்த்தகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.


நாளைய வரலாறு செய்திக்காக,


-முஹம்மதுஹனீப்,திருப்பூர்.


Comments