தீபாவளியன்று ஆரஞ்ச் அலர்ட்! - இந்திய வானிலை மையம்!!

     -MMH 


     இன்று முதல் வரும் 17 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கலில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கிழக்கு நோக்கி அடுத்தடுத்து வீசும் இரண்டு காற்று அலைகளால் வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் வரும் 17 ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



12 மற்றும் 14 ஆம் தேதிகளில் மிக கனமழையோ, மிக மிக கனமழையோ பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, கனமழையால் ஏற்படும் சவால்களை சமாளிக்கவும், அரசு தயார் நிலையில் இருக்கவும், தமிழகத்திற்கு 11,13 மற்றும் 15 ஆம் தேதிகளில் மஞ்சள் அலர்ட்டும், 12 மற்றும் தீபாவளி தினமான 14 ஆம் தேதிகளுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே சென்னையில் காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. விவேகானந்தர் இல்லம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயப்பேட்டை மற்றும் சேப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் காலை முதலே சாரல் மழை பெய்தது.


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக கடலோர பகுதியில்  நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர்,  காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 48  மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையின் சில பகுதிகளில்  இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போது ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.  


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


-V. ருக்மாங்கதன்,சென்னை.


Comments