இயந்திரமயமாகும் விவசாய சாகுபடி பணிகள்!! - பொறியியல் துறைக்கு தேவை கூடுதல் பொறுப்பு!!!

     -MMH


     உடுமலை:உடுமலை பகுதியில் பிரதானமாக உள்ள விவசாய சாகுபடியில் தொழிலாளர் பற்றாக்குறை முக்கிய பிரச்னையாக உள்ளது. எனவே இயந்திரங்கள் மட்டுமே  விவசாயப்பணிகள் அனைத்துக்கும் இன்றியமையாததாக மாறி வருகிறது. உழவு மட்டுமின்றி நெல், மக்காச்சோளம், கொண்டைக்கடலை உட்பட சாகுபடிகளில் விதைப்புக்கும், இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விவசாயிகளிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு ஒரே தீர்வாக இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதில் அரசுத்துறைகளின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி விவசாயிகளை கொண்டு சேர்க்க வேண்டிய வேளாண் பொறியியல் துறையின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.


     விவசாய சாகுபடிக்கு தேவையான டிராக்டர் மற்றும் பிற இயந்திரங்கள் அனைத்தும் விவசாயிகள் தேவைக்காக இத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இயந்திரங்களுக்கு குறைந்த வாடகையே அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை பயன்படுத்தும் விவசாயிகள் எண்ணிக்கை உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் சொற்ப அளவிலேயே உள்ளது. அத்துறையினரும் வட்டார வாரியாக இயந்திரங்கள் பயன்பாடு அரசு வழங்கும் மானியங்கள் குறித்து போதியளவு விழிப்புணர்வை விவசாயகளிடையே ஏற்படுத்துவதில்லை. எனவே தனியாரிடம் அதிக வாடகைக்கு பெற்று பயன்படுத்த வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். நடப்பு சீசனில் பி.ஏ.பி., அமராவதி பாசனத்தில் பல ஆயிரம் ஏக்கரில் பலவகையான சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான அறுவடை சீசனிலாவது  தங்களிடமுள்ள இயந்திரங்களை பயன்படுத்தி கொள்ளும் வகையில் வேளாண் பொறியியல் துறையினர் வட்டாரவாரியாக விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


நாளைய வரலாறு செய்திக்காக, 


-முஹம்மது ஹனீப் திருப்பூர்.


Comments