கழிவு நீரை முறையாக சுத்திகரிக்காமல்..சாக்கடையான திட்டம்! பாதாளத்துக்கு போகும் பராமரிப்பு நிதி!!

     -MMH 


     உடுமலை:உடுமலை நகராட்சி பாதாளச்சாக்கடை திட்ட, சுத்திகரிப்பு மையம் செயல்படாததால், வளாகத்திற்குள் கழிவு நீர் தேங்கியுள்ளதோடு, ரோட்டில் ஓடி சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறது.உடுமலை நகராட்சி, 33 வார்டுகள், 7.41 சதுர கி.மீ.,ல், 68 ஆயிரம் பேர் உள்ளனர். இங்கு, 56.07 கோடி ரூபாயில், 96.96 கி.மீ., நீளம் பாதாளச்சாக்கடை குழாய்கள், 3,900 ஆள் இறங்கும் குழிகள் மற்றும் வீடு, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என, 16,500 பாதாளச்சாக்கடை இணைப்புகள் வழங்கவும், கழிவு நீரை சுத்திகரிக்க, 7.81 எம்.எல்.டி., திறன் கொண்ட சுத்திகரிப்பு மையமும் அமைக்கப்பட்டது.பாதாளச்சாக்கடை திட்டம், நான்கு ஆண்டுக்கு முன், செயல்படத்துவங்கியது.


பணிகள் மேற்கொண்டதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, நகராட்சி வசம் ஒப்படைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால், குடிநீர் வடிகால் வாரியமே, சுத்திகரிப்பு மையத்தை பராமரித்து வருகிறது.தினமும், 35 லட்சம் லிட்டர் (3.5 எம்.எல்.டி.,) நீர், சுத்திகரிப்புக்கு வருகிறது. மையத்திற்கு வரும் கழிவு நீரில் ஆக்சிஜனேற்றம் செய்து, நன்னீரை வெளியேற்றி, கசடுகளை (ஸ்லெட்ஜ்) தொட்டியில் சேகரித்து, விவசாயத்திற்கு பயன்படுத்த, கசடு உலர்த்தும் படுகையான, எட்டு தொட்டிகளில் சேகரிக்கப்படுகிறது.ஆனால், பாதாளச்சாக்கடை திட்டத்தின், சுத்திகரிப்பு நிலைய இயக்கம், தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதால், கழிவு நீர் சுத்திகரிப்பு பணி முறையாக நடப்பதில்லை.வரும் கழிவு நீர் அனைத்தும், சுத்திகரிக்காமல் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இங்கு, இரு மோட்டார்கள் உள்ள நிலையில், ஒரு மோட்டார் பழுதாகி, ஆறு மாதமாக செயல்படாமல் உள்ளது. சுத்திகரிப்பு பணி, கழிவுகள் அகற்றுதல் என, 21 பேர் பணியில் இருக்க வேண்டிய நிலையில், ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.கழிவு நீரேற்றம், ஆக்சிஜனேற்றம் என எந்த பணிகளும் நடக்காமல், வரும், 35 லட்சம் லிட்டர் கழிவு நீரும் தேக்கப்படுவதோடு, இரவு நேரங்களில் அருகிலுள்ள ஓடை வழியாக வெளியேற்றப்படுகிறது.சுற்றிலும் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் உள்ள நிலையில், துர்நாற்றம், கொசு உற்பத்தி சுகாதாரக்கேடு ஏற்பட்டு, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.


இரு நாட்களாக உடுமலை பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, பாதாளச்சாக்கடை குழாய்கள் முறையாக அமைக்காததால், மழை நீரும் சேர்ந்து, சுத்திகரிப்பு மையத்திற்கு சென்றுள்ளது.அங்குள்ள மோட்டார்கள் இயங்காததால், சுத்திகரிப்பு நிலைய வளாகம் முழுவதும், பாதாளச்சாக்கடை கழிவு நீர், 5 அடி உயரம் வரை தேங்கியுள்ளதோடு, உடுமலை- பெதப்பம்பட்டி ரோட்டில் ஓடி வருகிறது.இதனால், அதிருப்தியடைந்த விவசாயிகள் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் நேற்று சுத்திகரிப்பு மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.எனவே, நகரப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதாளச்சாக்கடை திட்ட குழாய்கள் குறித்து மறு ஆய்வு செய்யவும், வீணாக உள்ள சுத்திகரிப்பு மையம் முறையாக செயல்படவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் பிரகாஷிடம் கேட்ட போது,''ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-முஹம்மது ஹனீப், திருப்பூர்.


Comments