டிசம்பர் 11 மகாகவி பாரதி பிறந்த நாள்..!!

                                           -MMH

     சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி  (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.

பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார்.

வாழ்க்கைக் குறிப்பு: சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882 இல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887 ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.

தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.

பாரதி தமிழ், ஆங்கிலம், இந்தி, சமசுகிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார்.

தேசியக் கவி: எட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீடு தற்போது தமிழக அரசால் சீர்செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசியக் கவியாகப் போற்றப்படுகிறார். மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே என்று எழுதியவர்.

தன்னுடைய தாய்நாட்டை நினைத்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.

பெண்ணுரிமைப் போராளி: பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே எனப் பெண்ணுரிமையை ஏத்தினார். "போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்" என்ற பாரதி பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா என்றார் .பெண்களின் கல்வியறிவுக்காகச் சட்டங்களைச் செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.

மறைவு: 1921 ஆம் ஆண்டு சூலை மாதம் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். கோவில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். பிறகு 1921 இல் செப்டம்பர் 12 அதிகாலை 01:30 மணிக்கு காலமானார்.

அவர் கடைசி நாட்களைக் கழித்த இல்லம் திருவல்லிகேணியில் உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,

பொள்ளாச்சி கிழக்கு.

Comments