குடிசை பகுதியில் வாழும் மக்களுக்கு டிச 13-ம் தேதி வரை இலவச உணவு!

-MMH

குடிசை பகுதியில் வாழும் மக்களுக்கு டிச.13-ம் தேதி வரை இலவச உணவு. மாநகராட்சி சார்பில் இன்று முதல் விநியோகம் சென்னை மாநகராட்சி சார்பில் மாநகரப் பகுதியில் குடிசைப் பகுதிகள் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசிப்போருக்கு இன்று (டிச.6) முதல் 13-ம் தேதி வரை இலவசமாக 3 வேளை உணவு வழங்கப்பட உள்ளது.

'நிவர்' மற்றும் 'புரெவி' புயல் காரணமாக சென்னையில் கடந்த இரு வாரங்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது. வியாசர்பாடி, செம்மஞ்சேரி உள்ளிட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகள் மற்றும் பல்வேறு குடிசைப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை மாநகராட்சி தொடங்க உள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தலின்படி, மாநகராட்சி முழுவதும் மழைக் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து அவதிப்பட்டு வரும், குடிசைப் பகுதிகள் மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசிப்போருக்கு சமைத்த, சூடான, சுகாதாரமான உணவு, 3 வேளையும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 5 லட்சத்து 30 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 26 லட்சம் பேர் பயன்பெறுவர். இத்திட்டம் டிச. 6 (இன்று) முதல் 13-ம் தேதி இரவு வரை அமல்படுத்தப்படும். இப்பணியில் மாநகராட்சி நிர்வாகம் முழுமூச்சுடன் ஈடுபட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

-பாலாஜி தங்கமாரியப்பன் சென்னை போரூர்.

Comments