விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய 3 அரசு அதிகாரிகள் கைது!!

     -MMH

      புதுக்கோட்டை: டிச - 3

     நிலத்தை உட்பிரிவு செய்வதற்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், துணை வட்டாட்சியர் மற்றும் நில அளவையர் ஆகியோரை புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கோமாபுரத்தை சேர்ந்த விவசாயி ராஜீவ்காந்தி என்பவர் தனது நிலத்தை உட்பிரிவு செய்வதற்காக கோமாபுரம் கிராம நிர்வாக அலுவலரை அணுகியபோது. அவர் அதற்கு லஞ்சமாக ரூபாய் 35 ஆயிரம் கேட்டுள்ளார். 

ராஜீவ் காந்தி ரூ.15,000 தருவதாகக் கூறியுள்ளார். ஒப்புக்கொண்ட வி.ஏ.ஓ ஜெரோம், பணத்தை தாலுகா அலுவலகத்திற்குக் கொண்டுவந்து தரச் சொல்லியுள்ளார். உடனடியாக விவசாயி ராஜீவ் காந்தி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள் என தகவல் கூறியுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரூ.15 ஆயிரம் பணத்தில் ரசாயனம் தடவித் தந்து, அதை லஞ்சம் கேட்ட அரசு அதிகாரியிடம் கொடுங்கள் என்று அனுப்பி வைத்தனர்.

லஞ்சப் பணத்தை விவசாயி ராஜீவ் காந்தி அரசு அதிகாரிகளிடம் கொடுக்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் காவல்துறை ஆய்வாளர் மற்றும் போலீசார் தாலுகா அலுவலகத்திற்கு திடீரென்று உள்ளே சென்று லஞ்சம் பெற்ற விஏஓ ஜெரோம், துணை வட்டாட்சியர் செல்வகணபதி மற்றும் நில அளவையர் முத்து மூவரையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் இவர்கள் லஞ்சம் பெற்றது உறுதியானதால் சுமார் 5 மணி நேரம் விசாரணை செய்த பிறகு மூவரையும் கைது செய்தனர்.

தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகளை கைது செய்தது புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- பாரூக், சிவகங்கை.

Comments