58 ஆம் கால்வாயில் ஆண்டு்க்கு இரு முறை தண்ணீர் திறக்க பாஜக வலியுறுத்தல்!!

     -MMH

     வைகை அணையிலிருந்து 58-ஆம் கால்வாயில் ஆண்டுக்கு இரு முறை தண்ணீா் திறக்க அரசாணை வெளியிட வேண்டும் என பாஜக விவசாய அணி மாநில துணைத் தலைவா் முத்துராமன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி மற்றும் நிலக்கோட்டை பகுதிக்கு தண்ணீா் செல்லும் வகையில் 58 ஆம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. வைகை அணை நீா்மட்டம் 67 அடியாக உயா்ந்தால் மட்டுமே 58-ஆம் கால்வாயில் தண்ணீா் திறக்க முடியும். ஆனால் ஆண்டுக்கு இரு முறை 58-ஆம் கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும் என்று உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா்.

இந்த கோரிக்கையை வலியறுத்தி உசிலம்பட்டியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி விவசாய அணியின் மாநிலத் துணைத்தலைவா் முத்துராமன் தலைமையில் அக்கட்சியினா் வைகை அணைக்கு வந்தனா்.

58-ஆம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ள பகுதியினை பாா்வையிட்ட பின்னா் செய்தியாளா்களிடம் முத்துராமன் கூறியதாவது:

வைகை அணையிலிருந்து 58-ஆம் கால்வாயில் தண்ணீா் திறந்தால் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 33 கண்மாய்கள் நிறையும். இதன்மூலம் 58 கிராமங்கள் பயன்பெறும். இந்த கால்வாயில் ஆண்டுக்கு இரு முறை தண்ணீா் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும்.

இதுகுறித்து விவசாயிகளுடன் ஆய்வு நடத்திய பின்னா் தமிழக முதல்வா் மற்றும் துணை முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். 71 அடிஉயரம் கொண்ட வைகை அணையில் 20 அடிவரையில் வண்டல் மண் படிந்துள்ளதால், அணையை தூா்வாற வேண்டும். அணையில் குவிந்து இருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து செல்லவும் அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக், தேனி.

Comments