கரூர் வைசியா வங்கியின் ஏ.டி.எம் வாகனத்திற்கு அடியில் பயணித்த போதை ஆசாமி!! - மக்கள் பரபரப்பு!!

    -MMH

     கடலூர் மாவட்டத்திலுள்ள பெண்ணாடம் பகுதியில் கரூர் வைசியா வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் நிரப்ப, பாண்டிச்சேரியை சேர்ந்த தனியார் நிறுவன வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இரண்டு, பணம் நிரப்பும் ஊழியர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், வாகனத்தை இராமநாதன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த வாகனம் விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்களில் பணத்தை நிரப்பி, கடைசியாக இரையூர் கிராமத்தில் உள்ள ஏ.டி.எம்மில் பணத்தை நிரப்பிவிட்டு வாகனத்தில் புறப்பட்டுள்ளனர்.

அந்த சமயத்தில், வாகனத்திற்கு அடியில் ஒருவர் தொங்கிக்கொண்டு பயணிப்பதை அப்பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் வங்கி மேலாளருக்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து வாகனத்தின் ஓட்டுநர் இராமநாதனை தொடர்புகொண்ட வங்கியின் மேலாளர் விஷயத்தை தெரிவித்துள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுனர், வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தி அடியில் சோதித்துள்ளார். அந்த சமயத்தில், 45 வயது மனிதர் வாகனத்தின் அடியில் உள்ள கம்பியை பிடித்தவாறு தொங்கியுள்ளார். அவரை வெளியே வரும்படி அழைத்த சமயத்தில், தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன வங்கி ஊழியர்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அடியிலிருந்த குடிகார போதை ஆசாமியை வெளியே இழுத்து விசாரணை செய்கையில், மது அருந்திவிட்டு வாகனத்தில் தொங்கியபடி பயணித்து சென்றதாகக் கூறியுள்ளார்.

அவர் முழு போதையில் பதில் கூறியதால், மதுபோதை ஆசாமிக்கு போதை தெளியும் வரை காவல்துறையினர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. போதை தெளிந்ததும் காவல் துறையினர் விசாரணை செய்வதாக தெரிவித்துள்ளனர்.              

-சுரேந்தர்.

Comments