"விவசாயிகளுக்கு உண்மையாக இருக்க விரும்புகிறேன்."!! - பத்ம பூஷன் விருதை திருப்பி வழங்கியுள்ளார் முன்னாள் முதல்வர்.

    -MMH

     புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் வலுத்துவரும் நிலையில், பஞ்சாப் முன்னாள் முதல்வரும், அகாலி தளம் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் மத்திய அரசு வழங்கிய பத்ம பூஷன் விருதை திருப்பி வழங்கினார்.

அதுமட்டுமல்லாமல் அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சுக்தேவ் சிங் திண்சாவும் தனக்கு வழங்கிய பத்ம பூஷன் விருதை திருப்பி வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

மேலும், பஞ்சாப், சண்டிகரைச் சேர்ந்த பல விளையாட்டு வீரர்களும் மத்திய அரசு வழங்கிய விருதுகளை திருப்பி வழங்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் கடந்த இரு மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 'டெல்லி சலோ' எனும் டெல்லி நோக்கிய போராட்டம் 8-வது நாளாக டெல்லியின் புறநகரில் நீடித்து வருகிறது. கடும் குளிர், கொரோனா பரவல் எதையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. விவசாயிகள் சங்கத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே நேற்று நடந்த 4-வது சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதற்கிடையே விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்தத் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் மத்திய அரசு வழங்கிய பத்ம பூஷன் விருதை திருப்பி வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக சிரோன்மணி அகாலி தளம் கட்சி வெளியிட்ட அறிவிப்பில் ' மத்திய அரசு விவசாயிகளுக்கு செய்த துரோகத்துக்கு எதிராக பத்ம பூஷன் விருதை பிரகாஷ் சிங் திருப்பி வழங்குவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அமைதியாகவும், ஜனநாயக முறையில் போராடி வரும் விவசாயிகளை நடத்தும் முறை கண்டு பிரகாஷ் சிங் பாதல் அதிர்ச்சி அடைந்துள்ளார். என் மதத்துக்கு அடுத்ததாக நான் விவசாயிகளைத்தான் மதிக்கிறேன்.

என்னிடம் உள்ள அனைத்தும், நான் பெருமையாகக் கருதும் அனைத்தும், நான் பொதுவாழ்க்கையில் இருந்த ஒவ்வொரு புனிதமான தருணமும், என் நீண்ட பொதுவாழ்க்கையில் சிறப்பாக அமைந்த அனைத்தும், விவசாயிகளை மையப்படுத்தி அமைந்ததுதான். எனக்கு இந்த தேசம் பத்ம விபூஷன் விருது கொடுத்து கவுரவித்ததும், நான் இந்த மக்களுக்கும், விவசாயிகளுக்கும் செய்த பணிகளைப் பார்த்துதான். அவர்களுக்கு உண்மையாக இருக்க விரும்புகிறேன். ஆதலால், என்னுடைய பத்ம பூஷன் விருதை திருப்பி வழங்குகிறேன்.

விவசாயிகளின் நம்பிக்கையைப் பெறவும், நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் மத்திய அரசுக்கு குடியரசுத்தலைவர் தனது அலுவலம் மூலம் அறிவுறுத்துவார் என நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அகாலி தளம் கட்சியின் மற்றொரு தலைவர் சுக்தேவ் திண்சாவும் கடந்த ஆண்டு மத்தியஅரசு வழங்கிய பத்ம விபூஷன் விருதை திருப்பி வழங்குவதாக அறிவித்துள்ளார். சுக்தேவ் விடுத்த அறிக்கையில் ' விவசாயிகள், முதியோர்கள், பெண்கள் டெல்லியின் எல்லையில் குவிந்துள்ளார்கள். நாங்களும் விவாசயிகளின் மகன்கள்தான். இந்த விருதுகளை வைத்து என்ன செய்யப் போகிறோம். விவசாயிகளுடன் தோளோடு தோள் சேர்ந்து நிற்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் சிங் பாதலின் அறிவிப்பை பஞ்சாப் காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. காங்கிரஸ் விடுத்த அறிக்கையில் ' அரசியல் கட்டாயம் காரணமாக பாதல் இந்த முடிவை எடுத்துள்ளார்' எனத் தெரிவித்தது. ஆம் ஆத்மி கட்சியோ, ' பிரகாஷ் சிங் பாதலின் நாடகம்' என விமர்சித்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த இரு மாதங்களுக்கு முன் மத்திய அரசிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும் சிரோன்மண் அகாலி தளம் வெளியேறியது. மத்திய அமைச்சர் பதவியிலிருந்தும் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-சுரேந்தர்.

Comments