கொரோனாவை விரட்ட ஒத்துழைப்பு கோரும் கலெக்டர்!!

     -MMH

     கோவையில் கொரோனா பரவல், தீபாவளிக்கு பின் அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில், முழுமையான கண்காணிப்பால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது தினசரி பாதிப்பு, 150க்குள் உள்ளது. இந்த எண்ணிக்கையை, 100க்குள் கொண்டு வரும் நோக்கில் தடுப்பு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  

இந்நிலையில், பொதுஇடங்கள், பொது நிகழ்வுகளில் தொடரும் விதிமீறல்களால், அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. பல இடங்களில் பொதுமக்கள் முககவசம் இன்றி நடமாடுவதும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமலும் இருக்கின்றனர்.இதுகுறித்து, கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:அனைத்து துறைகள் வாயிலாகவும், கொரோனா குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்துவரும் இச்சூழலில், பொது இடங்களில் பலர் முககவசம் அணியாமல் வருகின்றனர். வாரச்சந்தை, இறைச்சி கடை, மீன் மார்க்கெட் போன்ற இடங்களில், சமூக இடைவெளி பின்பற்றுவதில்லை.துணிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் மால்களிலும், இதே நிலை காணப்படுகிறது.

திருமண நிகழ்வுகளில் அரசு அனுமதித்த, 100 என்ற எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாக கூடுவதையும், விதிமுறை பின்பற்றாமல் இருப்பதையும் காணமுடிகிறது. அன்றாட தொற்று பரவலை, நுாறுக்குள் கொண்டு வர வேண்டுமென பாடுபடுகிறோம். சிலரின் அலட்சியம் காரணமாக, இந்த இலக்கை அடைவது தாமதமாகிறது. திருமணம் உள்ளிட்ட பிற நிகழ்வுகளுக்கு, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக நபர் கூடினாலும், விதிமுறை கடைப்பிடிக்காவிட்டாலும், திருமண மண்டபம் மூடி 'சீல்' வைக்கப்படும். வணிக நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.

விதிமுறைகள் கண்காணிக்கப்படுகிறதா என்பதை வருவாய்த்துறை, ஊராட்சி, மாநகராட்சி, போலீசார் அனைவரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆகவே, பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

-சுரேந்தர்.

Comments