சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் வழித்தடத்தில் வருகிற ஜனவரி மாதம் முதல் மெட்ரோ ரயில் சேவை!!

      -MMH

    சென்னை, வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோநகர் இடையே இம்மாதம் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னையில் 45 கி.மீ தூரத்தில் பச்சை மற்றும் நீள வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முதல் வழித்தட நீட்டிப்பு பணிகள் ரூ.3,770 கோடி மதிப்பீட்டில் வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 9.051 கி.மீ தூரத்தினாலான இவ்வழித்தடத்தில் 8 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது. 2 நிலையங்கள் சுரங்கப்பாதையிலும், 6 நிலையங்கள் உயர்மட்டத்திலும் அமைய உள்ளது.

முதல் வழித்தட திட்டத்தின் நீட்டிப்பு பணிகள் முடிக்கப்பட்டு இந்த வருடத்தில் இவ்வழித்தடத்தில் சேவையை செயல்படுத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் வரையில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதத்தில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக மெட்ரோ ரயில் நீட்டிப்பு பணிகளில் தடை ஏற்பட்டது. இதனால், திட்டமிட்டபடி பணிகளை முடிக்கவில்லை. கொரோனா ஊரடங்கில் அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் தற்போது தான் இறுதிகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்தநிலையில், பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதால் இவ்வழித்தடத்தில் இம்மாத இறுதிக்குள் சோதனை ஓட்டம் நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, சிறிய அளவிலான சோதனை ஓட்டத்தை இம்மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்த பிறகு ஜனவரி மாத இறுதியில் இவ்வழித்தடத்தில் சேவையை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சேவை நடைமுறைக்கு வந்தவுடன் இவ்வழித்தட பகுதியில் உள்ள 30 சதவீதம் பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-பாலாஜி தங்கமாரியப்பன், சென்னை போரூர்.

Comments